
மாறிவரும் உணவுப் பழக்க முறைகளால் சிறுவர்களுக்கும் வகை 2 நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே பாதிக்கப்படும் மாணவர்கள், தங்களது கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர். நீரிழிவு நோய் மட்டுமல்லாது உடல் பருமன், பல் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர் கொள்கின்றனர். பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகுவதால் , இதை தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளது.
மாணவர்களின் அதிக சர்க்கரை நுகர்வு நீரிழிவு நோயை ஏற்படுத்துவதுடன் பல உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து இணைக்கப்பட்ட பள்ளிகளும் தங்கள் வளாகங்களில் "இனிப்பு எச்கரிக்கை பலகைகளை" நிறுவ வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல் பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் முதன்மையாக பெரியவர்களிடம் காணப்பட்ட வகை 2 நீரிழிவு நோய், தற்போது குழந்தைகளிடமும் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், குழந்தைகளிடையே குறிப்பிடத்தக்க இது அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து இனிப்புகள், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர் பானங்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மூலம் ஏற்படுவதாக சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
வகை 2 நீரிழிவு நோய், பெரும்பாலும் பள்ளி வளாகங்களில் இனிப்பு பண்டங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதில் கிடைப்பதால் ஏற்படுவதாக தெரிகிறது. சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
இது மாணவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தையும் கல்வி கற்கும் செயல்திறனையும் பாதிக்கிறது. 4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு சர்க்கரை, தினசரி கலோரி உட்கொள்ளலில் 13% ஆகவும், 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 15% ஆகவும் உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட 5% வரம்பை விட அதிகமாக உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சர்க்கரை எச்சரிக்கை பலகையில் என்ன இருக்கும்?
1. பரிந்துரைக்கப்பட்ட அளவில் தினசரி சர்க்கரை உட்கொள்ளல்.
2. பொதுவாக உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரை உள்ளடக்கத்தை தெரிந்து கொள்ளுதல்.
3. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்குக் படிப்பினை ஏற்படுத்துதல்.
4. சர்க்கரைப் பொருட்களுக்கு ஆரோக்கியமான மாற்றுகளை பரிந்துரைத்தல்.
5. ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் சர்க்கரை அளவைக் குறைப்பதன் நீண்டகால நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை நடத்துதல் ஆகியன கூட இந்த செயலில் அடங்கும்.