
நாட்டில் ஏழை,எளிய மக்களுக்கு ஏற்ற போக்குவரத்தாக இரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இரயில் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரயில்வே அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபடியாக தற்போது அனைத்து இரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மத்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திட்டமிட்ட திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் சிசிடிவி கேமராக்கள் உதவும். இதுதவிர பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படும் என மத்திய இரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருசில இரயில்களில் சோதனை முறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து இரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கிமீ வேகத்தில் பயணிக்கும் இரயில்களில் கூட வெளிச்சம் குறைவான இடங்களில் தெளிவாக படம்பிடிக்கும் வகையில் அதிநவீன கேமராக்களைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஆய்வு செய்யுமாறு மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி 15,000 லோகோமோடிவ் மற்றும் 74,000 இரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இரயிலின் ஒவ்வொரு நுழைவிலும் 2 கேமராக்கள், இரயில் பெட்டியில் 4 சிசிடிவி கேமராக்கள் மற்றும் இரயில் என்ஜினில் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இரயில் என்ஜினின் முன் முற்றும் பின்புறம் தலா 1 கேமரா மற்றும் 2 மைக்ரோபோன்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் நவீன மற்றும் எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் இதன்மூலம் தடுக்கப்படும் என மத்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியன் இரயில்வேயின் இந்த நவீனமயமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, மிகச் சிறந்த இரயில் பயண அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரங்களில் இரயில் பயணத்தின் போது பல குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது பயணிக்ளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இரயில்வேயின் சிசிடிவி பொருத்தும் திட்டம், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நிச்சயமாக ஒருவித பயத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.