

இந்தியாவில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் வீடுகளின் விவரங்களும், இரண்டாம் கட்டத்தில் தனிநபர் மற்றும் சமூக-பொருளாதார விவரங்களும் சேகரிக்கப்படும். அதாவது 2027-ம் ஆண்டு நடக்கும் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் சாதி வாரியான தகவல்களும் சேகரிக்கப்படும். வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் (Digital) முறையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மொபைல் செயலி மூலமாகவும் தாங்களாகவே பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதலில் வீடுகள் கணக்கெடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2027 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கான முதல்கட்ட வீடு பட்டியலிடுதல் பணிக்கான வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் இந்த பணி வரும் 30-ம்தேதி வரை நடக்கிறது. சுய கணக்கெடுப்பு கடந்த 17-ம்தேதி தொடங்கி 31-ம்தேதி வரை நடந்தது.
1948-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த பணி நாட்டின் திட்டமிடல், தொகுதிகள் மறுவரையறை மற்றும் பொது கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி கணக்கெடுப்பு வீட்டு எண், குடும்பத்தில் வசிக்கும் மொத்த நபர்கள் எண்ணிக்கை, குடும்ப தலைவரின் பெயர், குடிநீரின் முக்கிய ஆதாரம், மின்விளக்கு வசதி, இணையதள வசதி, தொலைபேசி, செல்போன், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் உள்பட 33 கேள்விகள் இடம்பெறும்.
எனவே அரசு அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினரின் பெயரையோ அல்லது கணவர் மற்றும் வழக்கத்தின்படி குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட நபர்களின் பெயரையே கூற எவரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
இத்துறையால் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-ன் கீழ் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பின் போது விதிமுறைகளின்படி இணக்கமற்ற சூழல் அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தால் சட்ட விதிகளின்படி ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.