

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் 30 வரை வீடு தோறும் சென்று விபரங்கள் சேகரிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாயிலாக வீடு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம், வீட்டு வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும்.
2026 மற்றும் 27-ம் ஆண்டில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி 2011-க்குப் பிறகு அடுத்த கணக்கெடுப்பு 2021-ல் நடைபெற வேண்டியிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் உலகையே புரட்டிப் போட்ட கொரானா பெருந்தொற்று.
2020-ல் தொடங்கிய கொரோனா தொற்று வேகமாக பரவியதால் 2021ல் எடுக்க வேண்டிய வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் கொரோனாவிற்கு பிறகும் பயிற்சி, தரவு சேகரிப்பு, டிஜிட்டல் கணக்கெடுப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சவால்கள் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் காரணமாக கணக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது.
ஆகவே 2011-க்கு பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இது என்பதால் தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை, வீட்டு வசதி மற்றும் சமூக-பொருளாதார நிலை பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும் முக்கியமான கணக்கெடுப்பாக கருதப்படுகிறது.
மேலும் இம்முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முழு டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 1, 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் வழிமுறைகள்..
ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்கள் தாங்களே இணையதளத்தின் மூலம் சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையில் தங்களைப் பற்றிய தகவல்களை தாங்களே பதிவு செய்யலாம்.
ஆகஸ்ட் 1 முதல் 30 வரை வீடுகள் மற்றும் குடியிருப்புகள் தொடர்பாக முதல் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படும்.
காகிதப் படிவங்களுக்கு பதிலாக மொபைல் செயலி மூலம் நாம் தரும் தகவல்களை நேரடியாக பதிவு செய்வார்கள்.
டிஜிட்டல் கணக்கெடுப்பின் நன்மைகள்
நமது தரவுகள் பாதுகாப்பான டிஜிட்டல் சேமிப்பு மையங்களில் சேமிக்கப்படும்.
தகவல் சேகரிப்பு தாமதமின்றி வேகமாக நடைபெறும்.
எழுத்து மற்றும் வாய்வழித் தகவல்கள் மூலம் எழும் மனிதப்பிழைகள் குறையும்.
தரவுகள் விரைவாக பகுப்பாய்வு செய்யப்படும்.
அரசு திட்டமிடலுக்குத் துல்லியமான மக்கள் தொகை மற்றும் சமூக-பொருளாதாரம் குறித்த நேர்மையான தகவல்கள் கிடைக்கும்.
முதல் கட்டப் பணிகள் நிறைவுற்ற பின்னர் இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 2027-இல் மீண்டும் மக்கள் தொகை விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த கட்டத்தில் சாதி கணக்கெடுப்பும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
2011-ல் இந்திய மக்கள் தொகை சுமார் 121 கோடி என பதிவானது என்றும் அதன் பிறகு 16 ஆண்டுகளாக புதிய முழுமையான மக்கள் தொகைத் தரவு இல்லாததால், அரசின் நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பலவற்றில் அரசு பழைய தரவுகளையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பின் மூலம் நிலைமை நிச்சயமாக மாறுவதோடு, தேவைப்படுவோருக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.