8ம் வகுப்பு வரையிலான ஆல் பாஸ் என்ற முறையை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு.
ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் பெறாவிட்டாலும் பாஸாகி அடுத்த வகுப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் செல்வார்கள். இதனால் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10ம் வகுப்பு, அதுவும் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு என்பதால், மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மேலும் ஆல் பாஸ் முறை இருக்கும்போது ‘என்ன ஆனாலும் பாஸ் ஆகிவிடுவோம். எதற்கு படித்துக்கொண்டு? என்று அலட்சியம் மாணவர்களுக்கு இருப்பதால், கற்க வேண்டியதை, தெரிந்துக்கொள்ள வேண்டியதை கற்காமலும் தெரிந்துக்கொள்ளாமலும் விட்டுவிடுகிறார்கள்.
இது மாணவர்களுக்கு எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் நன்மை தருவதாக இல்லை.
இவையனைத்தையும் விட, 8ம் வகுப்பு வரை எளிதாக பாஸ் ஆகிவிட்டு, உடனே பொதுத்தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், சில மாணவர்கள் விபரீத முடிவுகளையும் எடுக்கின்றனர்.
இந்த அனைத்து விதமான இன்னல்களையும் சரிசெய்யத்தான் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும். துணை தேர்விலும் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பள்ளி நிர்வாகத்திற்கும் சில அட்வைஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறை கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும், இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.