காலை உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமாகும். இரவு முழுவதும் தூங்கி காலையில் எழுந்து எடுத்துக்கொள்ளும் முதல் உணவு உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுவே அந்த நாள் முழுக்க உங்கள் உடலுக்கு சக்தியை கொடுக்கும். அதனால் காலை உணவை தவிர்ப்பது நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. காலை உணவைத் தவிர்ப்பதால், உடலில் செரடோனின் மற்றும் டோபமைன் என்னும் ஹார்மோனின் அளவு குறைவதால் உடலில் படப்படப்பு மற்றும் மனதில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.
2. காலையில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்காமல் எடுத்துக்கொள்வது சிறந்தது.
3. காலை உணவு சாப்பிடாமல் இருக்கும்போது, அதிக மன அழுத்தம், எரிச்சல், சோர்வு மற்றும் கோபம் போன்றவை உண்டாகும். இதனால் நம்முள் நெகட்டிவ் எனர்ஜி உருவாகிவிடும்.
4. காலை உணவை தவிர்த்து வருவதால், உடலுக்குத் தேவையான வைட்டமின், மினரல் போன்றவை சரிவரக் கிடைக்காது. இதனால் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
5. காலை உணவை தவிர்ப்பதால், வயிற்றில் அல்சர் புண் ஏற்படும். இதனால் வாயில் துர்நாற்றம் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க நம் வயிற்றில் தானாகவே அமிலங்கங்கள் சுரக்கத் தொடங்கும். அவ்வாறு சுரக்கும்போது ஜீரணிப்பதற்கு உணவில்லை என்றால் அசிடிட்டி உருவாகும்.
6. காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், அதிகமாக பசி எடுக்கத் தொடங்கும். இதனால் அடுத்த வேளை உணவை அதிகமாக சாப்பிடுவீர்கள். இது உடலின் எடையை அதிகரித்துவிடும். உடலில் உள்ள மெட்டபாலிசம் வேலை செய்வதும் குறைந்துவிடும்.
7. காலை உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், மைக்ரேன் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் காலை உணவை தவிர்ப்பதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவதால் இரத்த அழுத்தம் அதிகரித்து மைக்ரேன் தலைவலி வருவதற்குக் காரணமாக அமைந்துவிடும். எனவே, காலை ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.