

மத்திய அரசு கடந்த செப்டம்பர் 22-ம்தேதி அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி 2.0-ல், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கி ஜீரோவாக்கப்பட்டது. அதுவும் 18 சதவிகிதத்தில் இருந்து நேரடியாக ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நடுத்தர மக்கள் மற்றும் முதியோர் பயன்பெறும் வகையில் காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்து, அனைத்து தரப்பு மக்களும் மருத்துவ காப்பீடுகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அதற்கு முன் ‘என்டோவ்மென்ட்' எனப்படும் ஆயுள்காப்பீட்டுக்கு முதலாம் ஆண்டு 4.5 சதவீதமும், அடுத்த ஆண்டில் இருந்து 2.25 சதவீதமும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டது. இதுதவிர ‘யூலிப்' எனப்படும் மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கும், மருத்துவ காப்பீட்டுக்கும் 18 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது.
இதனால், சந்தாதாரர்கள் ஒவ்வொரு பிரிமீயத்தின் போதும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அதாவது, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மருத்துவ காப்பீடு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து கூடுதலாக செலுத்தும் நிலை இருந்தது. எந்தவித வருமானமும் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இந்த வரி விதிப்பு மிகுந்த சிரமத்தை கொடுத்து வந்தது.
உடல்நலம் தொடர்பான காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிக்கப்பட்டதற்கு ஆரம்பம் முதலே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இதுபோன்ற பல்வேறு காரணிகள், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விலக்கால் சாமானிய மக்களின் பணச்சுமை குறைத்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு மருத்துவ காப்பீட்டுக்கான 18% ஜிஎஸ்டி வரியை நீக்கியதை தொடர்ந்து பிரீமியம் கட்டணங்கள் குறையும் என்று காப்பீடு எடுத்தவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கான பீரிமியம் தொகையை காப்பீடு நிறுவனங்கள் உயர்த்தி உள்ளததால் காப்பீடுதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் மருத்துவ காப்பீட்டுக்கான பீரிமியம் கட்டணம் 20% இருந்து 50% வரை கணிசமாக உயர்ந்தப்பட்டிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பொருளாதார நிபுணர், ஆண்டுக்கு 10,000 ரூபாய் பிரீமியம் செலுத்து வந்தவர்கள் தற்போது 12,000 முதல் 15,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி உயர்வுக்கான முக்கிய காரணமாக காப்பீடு நிறுவனங்களின் வருவாய் இழப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது ஜிஎஸ்டி நீக்கத்தின் காரணமாக காப்பீட்டு நிறுவங்களுக்கு கிடைத்து வந்த குறிப்பிட்ட லாப வரம்பு குறைய தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட போது அந்த தொகையை நிறுவனங்கள் பிற நிர்வாக செலவுகளில் ஈடுகட்டி லாபத்தை பராமரித்து வந்தாக கூறப்படுகிறது. லாபம் குறைவதை தடுக்கவும், ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பராமரித்து பங்குதாரர்களின் நலனை பாதுகாக்கவும் காப்பீடு நிறுவனங்கள் இந்த பிரீமியம் உயர்வை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் பிரீமியம் உயர்த்தப்பட்டாலும் காப்பீடுதாரர்கள் தங்கள் திட்டங்களில் இருந்து வெளியேற மாட்டார்கள் என்ற நம்பிக்கை காப்பீடு நிறுவனங்களுக்கு உள்ளது. ஏனெனில் ஒருவர் பழைய திட்டத்தை ரத்து செய்து விட்டு புதிய காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியும்.
மேலும் புதிய காப்பீடு திட்டங்களுக்கான காத்திருப்பு காலத்தை வாடிக்கையாளர்கள் மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். ஆகவே காப்பீட்டு நிறுவனங்களின் இந்த முடிவால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை பொதுமக்களையே நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு மருத்துவ காப்பீட்டுக்கான ஜிஎஸ்டியை நீக்கிய போதும் காப்பீடு நிறுவனங்களின் இந்த அணுகுமுறை பொதுமக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.