ஹேர் டை போடுபவரா நீங்கள்? மத்திய அரசின் அதிரடி உத்தரவு... இனி 'இதை' செஞ்சே ஆகணும்..!!

தலைமுடி சாயங்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Hair Dye
Hair DyeAI Image
Updated on

லட்சக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் நரை முடியை மறைக்க அல்லது தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ள தலைமுடிச் சாயப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் நரை முடியை மறைக்க தலைமுடிச் சாயம் (ஹேர் டை- Hair Dye) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்தியாவிலும் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு சமூகத்தில் நல்ல தோற்றத்தை பராமரிக்க வேண்டிய கட்டாயம், வேலைச்சூழல் மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் இளநரை ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைகின்றன. மேலும் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மற்றும் தொழில்முறை காரணங்களால், இளமையாகக் காட்சியளிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க விதவிதமான சாயங்கள் சந்தையில் கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட். இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம்.

அந்த வகையில் ஒரு சிலருக்கு ரசாயனம் கலந்த (அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு) சாயங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது முடி உதிர்தல், வறட்சி, மற்றும் தோல் அலர்ஜி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தலைமுடி சாயங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மத்திய அரசு நிர்ணயித்துள்ள தரநிலைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு CDSCO (Central Drugs Standard Control Organisation) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தலைமுடி சாயங்களில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்கள் கடுமையான ஒவ்வாமை, தோல் எரிச்சல் மற்றும் தலையோட்டு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு தலைமுடி சாயப் பொருட்களின் கலவை, தயாரிப்பு முறை அல்லது தரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

Hair Dye
hair dye

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை தடுக்கும் நோக்கில், தயாரிப்புகளில் லேபிள்களில் (உறை அல்லது பாட்டில்) உற்பத்தி விவரங்கள்(மூலப்பொருட்கள்), பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயனப் பொருட்களின் முழு பட்டியல், பாதுகாப்பு எச்சரிக்கைகள் வாசகங்கள், பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை நுகர்வோருக்கு தெளிவாக தெரியும் வகையில் லேபிள்களில் (Labels) தெளிவாக அச்சிடப்பட வேண்டும்.

இந்தியாவில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், தங்களின் பொருட்களில் உள்ள உட்பொருள் விவரங்கள் மற்றும் எச்சரிக்கை தகவல்களை கண்டிப்பாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அனைத்து அழகுசாதனப் பொருட்களும் இந்திய தர நிர்ணய கழகத்தின் விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். தலைமுடி சாயங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் தொடர்பான விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கண்டிப்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையமான CDSCO விதித்துள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்:

* பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் விவரங்கள், பக்கவிளைவுகள் மற்றும் ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை குறித்த எச்சரிக்கைகளை லேபிளில் கட்டாயம் அச்சிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

* நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை தகவல்கள் மாநில மொழிகளிலும் இடம்பெற வேண்டும்.

* தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வாமை பரிசோதனை (Patch-test) செய்வதற்கான வழிமுறைகளை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஹேர் டை போடுபவர்களுக்கு சில அத்தியாவசிய ஆலோசனைகள்!
Hair Dye

நரை முடியை மறைக்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் அதிகரித்து வரும் தேவையின் காரணமாக, இவ்வகைத் தயாரிப்புகள் விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com