

மத்திய கிழக்கில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சாக்காக வைத்து, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உணவுப் பில்லில் கூடுதலாக 'எல்.பி.ஜி கட்டணம்' (LPG charges) வசூலிப்பதற்கு மத்திய அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் காரணமாக உலகின் முக்கியமான நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதுக்கும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியா, தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யா மற்றும் அர்ஜென்டினா போன்ற மாற்று நாடுகளை நாடுகிறது, மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல் போக்குவரத்தை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருவதால், எரிபொருள் ஓட்டம் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கம் போதிய அளவு கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ள போதிலும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் ஹோட்டல்கள், உணவகங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சாதாரண நாட்களில் ஒரு ஹோட்டலுக்குத் தினசரி 1 முதல் 2 சிலிண்டர்கள் தேவைப்படும். விசேஷ ஆர்டர்கள் இருந்தால் 5 முதல் 7 சிலிண்டர்கள் வரை தேவைப்படும். தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பைப் பயன்படுத்த நினைத்தாலும், விறகின் விலை கிலோவிற்கு ரூ.5-லிருந்து ரூ.7-ஆக உயர்ந்துவிட்டது. மேலும், நகர்ப்புறங்களில் புகை காரணமாக விறகு அடுப்பு பயன்படுத்த அனுமதி கிடைப்பதில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள உணவகங்களில் சில மூடப்படுவதாகவும், சில உணவகங்கள் உணவுப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சைனீஸ், வடஇந்திய உணவுகள் தயாரிக்கப்பட மாட்டாது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அடுப்புகள் தொடர்ந்து எரியும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளான சைனீஸ், வட இந்திய துரித உணவுகள், தோசை உள்ளிட்டவை இனி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை சாக்காக வைத்து பல ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் எண்ணிக்கையை குறைந்ததுடன், விலையையும் அதிகரித்துள்ளனர். அதுமட்டுமின்றி சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உணவுப் பட்டியலில் (Menu Card) உள்ள விலையைத் தாண்டி, உணவுப் பில்லில் 'எல்.பி.ஜி கட்டணம்' (LPG charges) என்று கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்துள்ளதாக நுகர்வோர் அமைப்பான சிசிபிஏ தெரிவித்துள்ளது.
LPG charges, Gas Surcharge, Fuel Cost Recovery, Gas Crisis Charges இத்தகைய பெயர்களில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் தானாகவே பில்லில் கூடுதல் தொகையைச் சேர்ப்பது 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' (Unfair Trade Practice) என்று சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி கரே தெரிவித்துள்ளார்.
மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையே இறுதியானது என்பதால் அரசு விதித்துள்ள வரி தவிர வேறு எந்தக் கூடுதல் கட்டணத்தையும் பில்லில் சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. எரிவாயு, மின்சாரம், இதர எரிபொருள் செலவுகள் ஒரு தொழிலை நடத்துவதற்கான அடிப்படைச் செலவுகள், இவற்றை உணவின் விலையிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, தனியாக வாடிக்கையாளர் தலையில் சுமத்தக்கூடாது என்று அரசு கூறியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், இத்தகைய கூடுதல் கட்டணங்களை வசூலிப்பது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் இந்த வழிகாட்டுதல்களை மீறி 'எல்.பி.ஜி கட்டணம்' (LPG charges) என்று கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் உணவக பில்லில் இத்தகைய முறையற்ற கூடுதல் கட்டணங்கள் இருப்பதை உணர்ந்தால், உடனடியாக தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (National Consumer Helpline - NCH) புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.