கடந்த வாரம் இராணுவம் அரசைக் கைப்பற்றிய நைஜீரிய நாட்டில் சமாதானம் ஏற்படுத்த, சாத் நாட்டின் அதிபர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பிடித்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய அதிபர் பசௌமை, சாத் அதிபர் மகமத் இத்ரிஸ் டெபி சந்தித்துப் பேசிய படங்கள் இன்று காலையில் வெளியிடப்பட்டன. அதில் பசௌம் சிரித்த முகத்துடனும் துன்புறுத்தப்படாதவராகவுமே காணப்படுகிறார்.
அவரை மட்டும் அல்லாமல், இராணுவத் தளபதியும் இப்போது அரசுத் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டவருமான
அப்துர் ரகுமான் தியானியையும் டெபி சந்தித்துப் பேசினார். இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த இந்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறிய அவர், மேற்கொண்டு விவரங்களைத் தெரிவிக்க வில்லை.
நைஜீரிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய கலகத்தின் முக்கிய பங்காளரான கர்னல் அமடௌ அப்டிரமனே, பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிபர் பிரான்ஸ் அரசை தங்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார் என்றும் அவருடைய வெளியுறவு அமைச்சராக இருந்த ஹசௌமி மசௌதௌவை பிரதமராக நியமித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
ஆனால், பிரான்ஸ் மூலம் என்ன வகையான தாக்குதலை தங்கள் மீது தொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை.
முன்னதாக, இராணுவக் கலகக் குழுவினர் பசௌமைப் பாதுகாப்பது என்கிற பெயரில் ஏதாவது தலையிட்டால், நாட்டில் ரத்தக்களரி உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.
இராணுவக் கலகக் குழுவின் ஆதரவாளர்கள் நேற்று ஞாயிறன்று நைஜீரியாவில் உள்ள பிரெஞ்சுத் தூதகரத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளை சரிவரக் கையாளவில்லை என்றும் நாட்டின் வறுமை மோசமடைந்துள்ளது என்றும் கூறித்தான், பசௌமின் ஆட்சியை இராணுவத்தளபதி தலைமையிலான குழுவினர் கவிழ்த்தனர்.
ஆனால் நாடு முழுவதும் பரவியிருக்கும் இசுலாமிய ஆயுதக் குழுக்களை எதிர்த்துச் சண்டையிடுவதற்காகவே, பிரான்ஸ் உட்பட்ட பல நாடுகளின் படையினரும் நைஜீரியாவில் நிலைகொண்டுள்ளனர்.
அதிபரை நீக்கிவிட்டு இராணுவத்தளபதி தியானி அரசைக் கைப்பற்றியதை, ரஷ்ய ஆதரவு வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின் வரவேற்று கருத்து தெரிவித்தார். ஆனால் ரஷ்ய அரசோ, நைஜீரியாவில் அரசியல்சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஜெர்மனி அரசோ நிலவரம் இன்னும் குழப்பமாகவே இருப்பதாகவும் மீண்டும் ஒரு முறை அரசுக் கவிழ்ப்பு நிகழும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில், இராணுவக் கலகக் குழுவின் குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
ஆப்பிரிக்க ஒன்றியமும் ஐநாவும் நைஜீரியாவில் மீண்டும் அரசியல்சாசனப்படியான அரசாங்கம் வரவேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், சமாதானப் பேச்சும் நடைபெற்றுள்ளது. இது வெற்றிபெறுமா என்பது உறுதிபடத் தெரியவில்லை.