இன்று ஆந்திரா முதல்வராகப் பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

Chandrababu Naidu
Chandrababu Naidu

சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திராவின் முதல்வராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பல தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அத்துடன் சில மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக, ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

அதனையடுத்து  சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்றதால், சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் அவர் இன்று காலை 11.27 பதவியேற்கிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர்  பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.  

இதையும் படியுங்கள்:
"பயப்படாதே புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு" மாஸாக வெளியானது கல்கி 2898 ஏடி பட ட்ரைலர்.. எப்படி இருக்கு?
Chandrababu Naidu

செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதி தான் இருக்கும்.  நாங்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்போம், பழிவாங்கும் அரசியலை செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார். 3 தலைநகர், 4 தலைநகர் என  மக்களோடு விளையாட மாட்டோம். அதே நேரம் விசாகப்பட்டினம்   வர்த்தக தலைநகரமாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், துணை முதல்வராக நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பதவியேற்க வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com