
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் இன்றைய நவீன உலகில் கேஸ் சிலிண்டர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்கேற்ப இந்துஸ்தான், பாரத் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்களை விநியோகித்து வருகிறது.
வீடுகளுக்கு 14.20 கி.கி. எடை கொண்ட சிலிண்டரும், வர்த்தகப் பயன்பாட்டிற்கு 19 கி.கி. எடை கொண்ட சிலிண்டரும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் விலையை மாதந்தோறும் முதல் தேதி எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. அவ்வகையில் இன்று (ஆகஸ்ட் 01) சிலிண்டர்களின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதே அடிப்படையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டுப் பயன்பாட்டிற்கு உதவும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் வர்த்தக சிலிண்டரின் விலையில் மட்டும் ரூ.34.50 குறைந்துள்ளது. சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பை இன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி வீட்டு சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படும். வர்த்தக சிலிண்டர் ரூ.34.50 குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய விலையில் இருந்து பார்த்தால் தற்போது ரூ.191 வரை சிலிண்டர் விலை குறைந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் மட்டுமே வர்த்தக சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்தது. மற்ற மாதங்களில் வர்த்தக சிலிண்டரின் விலை தெடர்ந்து குறைந்து வருகிறது. இந்த விலைக் குறைப்பு வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் குறையாதா என இல்லத்தரசிகள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், சிலிண்டர் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.