தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம்..? நவ 23 ,24 தேதிகளில் ஆலோசனை..!

teacher
teacher
Published on

தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைகள் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் புதிய துறைகளை சேர்ப்பது பற்றியும் , பாடங்களை நவீன யுகத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை புதிய பாடத்திட்டத்தை (SEP 2025) உருவாக்கும் பணிக்காக , அமைக்கப்பட்ட குழுக்களின் தொடர் ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றாக இருக்கும்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, மாநிலக் கல்விக் கொள்கை 2025 (SEP - State Education Policy 2025)-ன் அடிப்படையில், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களை , எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் சாவல்களை திறம்பட கையாளும் வகையில் மேம்படுத்த , பல புதிய துறைகளை தமிழக அரசு உருவாக்க உள்ளது. இதன் படி அதிநவீன தொழில் நுட்ப படிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய படிப்பில் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோடிக்ஸ் (Robotics), மற்றும் கோடிங் (Coding) போன்ற பிரிவுகள் படிப்படியாகச் சேர்க்கப்படும் என்று முந்தைய ஆலோசனைகளில் கருத்து தெரிவிக்கப்பட்டது.சுற்றுச்சுழல் பாதுகாப்பு பற்றி அறிந்துக் கொள்ள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடங்கள் சேர்க்கப்பட உள்ளது.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக் கல்வி பிரிவுகளில் மனநலம், பாலின உணர்திறன், உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட ஆலோசனையில் உள்ளது. தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக கலாச்சார சூழல் மற்றும் மரபுகளைக் அறிய தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகிய பிரிவுகளில் புதிய துறை சேர்க்கப்படும். மாணவர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்தி அவர்களை கண்டுபிடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கிரியேட்டிவிடி உள்ள பாடங்கள் சேர்க்கப்படும் .

இந்த மாற்றங்களைச் செய்ய இரண்டு முக்கியக் உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நவம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் ஆலோசனையில் ஈடுபட உள்ளன. கல்விக் கொள்கை மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் வி. நாராயணன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில் தலைமையில் உள்ள குழு புதிய துறைகளை இணைப்பது குறித்து விரிவான திட்டங்களைத் தயாரிக்கும். இது சம்மந்தமாக மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும். மேலும் தற்போதைய பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு , புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான பரிந்துரைகளை உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். உயர்மட்ட குழுவின் தலைவராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு : சென்னை அருகே உருவாகும் 'குளோபல் சிட்டி' ...!
teacher

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com