

தமிழ்நாடு பல்வேறு வகைகளில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னை அகில இந்திய அளவில் மிக முக்கியமான நகரமாக வளர்ந்து வருகிறது. அதிக வேலை வாய்ப்புகளையும் அளித்து வருகிறது.இதன் காரணமாக வேலை தேடி ஏராளமான மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்னம் இருக்கின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளை விரிவு படுத்த வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு புதிய நகரங்களை சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதில் முனைப்பு காட்டிவருகிறது.
அந்த வகையில் சமீபத்திய நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னையின் புறநகர் பகுதியில் குளோபல் சிட்டி அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்து இருந்தது
இந்நிலையில், சென்னையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுராந்தகம் அருகே இந்த குளோபல் சிட்டி அமைய இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள ஜானகிபுரம், பழையனூர், அத்திமணம், படாளம், கள்ளபிரான்புரம் மற்றும் புலிப்பரக்கோயில் (புலிபுரகோயில்) ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியாதாக இந்த நகரம் அமையும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இந்த திட்டத்திற்காக 787 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழையனூரில் 468 ஹெக்டேர் நிலமும், ஜானகிபுரம் பகுதியில் 162 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தை பல கட்டமாக செயல்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே செயல்பட்டு வரும் மகேந்திரா சிட்டி போன்று, இந்த குளோபல் சிட்டி உருவெடுக்கும். இத்தகவலை தமிழக அரசு சமீபத்தில் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த குளோபல் சிட்டி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பெருநகரங்களுக்கு அருகே துணைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இந்த திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) செயல்படுத்த உள்ளது.
இந்த குளோபல் சிட்டியில் ஒரு நகரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும். அந்நகரத்தில் பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், வங்கிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,மாநில அர்சின் இந்த அறிவிப்பின் காரணமாக மதுராந்தகம் பகுதி மக்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.