

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும் பொழுது முதியோர்களிடம் கையெழுத்து பெற்றும் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் ரேஷன் திட்டம். தமிழ்நாட்டு மக்களுக்காக முதல்வரின் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று அரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இதில் அந்தக் குடும்பத்தின் தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைப்படி பதிவேற்றம் செய்து, விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4ஜி., சர்வர் அடிக்கடி பழுதாவதும், செயல்படாமல் போவதுமாக இருப்பதால் கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கூறியது.
இதையடுத்து இத்திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவாகவில்லை என்றால், உரிய பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டு ரேஷன் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 முதியவர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.