

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களும் வீட்டிலிருந்து பள்ளி/கல்லூரிக்குச் செல்லவும், வீடு திரும்பவும் அனைத்து சாதாரண, விரைவு, மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் (இரவு நேர மற்றும் ஏசி பேருந்துகள் தவிர) இலவசமாக பயணம் செய்யலாம்.
அதேபோல் இந்திய ரெயில்வே பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய ரெயில்வே பயணிகள் பயன்பெறும் வகையில் டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும்,பலருக்கும் ரெயில் டிக்கெட் விலையில் உள்ள பல்வேறு சலுகைகள் தெரியாததாலும் அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.
இந்தியன் ரெயில்வே பயணிகளுக்கு சலுகைகளை வழங்குவதை போலவே பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் ரெயில்வே துறையால் வழங்கக்கூடிய இந்த சலுகைகள் பற்றி நிறைய மாணவர்களுக்கு தெரியாததால் இதை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.
இந்தியன் ரெயில்வே வழங்கும் இந்த சலுகைகள் மூலம் மாணவர்கள் தங்களுடைய ரெயில் டிக்கெட்டில் 50 லிருந்து 75% வரை தள்ளுபடி பெற முடியும்.
12-ம் வகுப்பு முதல் 25 வயதிற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயம் இந்த டிக்கெட் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சொந்த ஊரில் விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், உங்களுடைய சொந்த ஊருக்கு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ சொந்த ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் பயணம் செய்கிறீர்கள் எனும் போது இந்த டிக்கெட் தள்ளுபடி உங்களுக்கு பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும் இந்த டிக்கெட் சலுகையை பெற முடியும். இந்த வசதியின் கீழ், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஸ்லீப்பர்-கிளாஸ் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். MST அல்லது QST (காலாண்டு சீசன் டிக்கெட்) வைத்திருப்பவர்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
சலுகைகள் மற்றும் விதிமுறைகள்
* இந்தியன் ரெயில்வேயின் இந்த சலுகைகள் ஐஆர்சிடிசி (IRCTC) செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு கிடைக்காது. ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்டரில் டிக்கெட முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
* பொது பிரிவு மாணவர்களுக்கு டிக்கெட் விலையில் 50% தள்ளுபடியும், SC/ ST மாணவர்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளிலும், MST மற்றும் QST யிலும் 75 சதவீத தள்ளுபடி கிடைக்கும். உதாரணமாக 12-ம் வகுப்பு முதல் 25 வயதிற்கு உட்பட்ட பொது பிரிவை சேர்ந்த மாணவர்கள் ஏதாவது ஒரு ஊருக்கு செல்வதற்கு தோராயமாக 500 ரூபாய் டிக்கெட் எடுப்பதாக வைத்து கொண்டால் அவர்களுக்கு 250 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம். அதுவே அவர்கள் SC/ST பிரிவு மாணவராக இருந்தால் 125 ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும்.
* ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மாணவ, மாணவிகள் தங்களுடைய ஸ்டூடன்ட் ஐடி கார்டை காண்பித்தால மட்டுமே தள்ளுபடி டிக்கெட்டை பெறமுடியும்.
* ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 2nd seating டிக்கெட்டுகளுக்கு மட்டுமே மாணவர்களுக்கு இந்த சிறப்பு தள்ளுபடி கிடைக்கும்.
* இதேபோல், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கல்வி சுற்றுலா செல்வதற்கு பொது வகுப்பு ரெயில் டிக்கெட்டுகளில் 75 சதவீத சலுகையைப் பெறலாம்.
* மெடிக்கல், இன்ஜினியரிங் போன்ற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை எழுதுவதற்கு சொந்த ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ரெயிலில் பயணம் செய்யும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ரெயில் டிக்கெட்டுகளில் 75 சதவீத தள்ளுபடி பெற உரிமை உண்டு. இந்தச் சலுகை பொது வகுப்பு ரயில் பயணத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த சலுகையை பெற தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
* மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) மற்றும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை எழுதப் பயணிக்கும் மாணவர்கள் ரெயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகையைப் பெறலாம். ரெயில்களில் பொது வகுப்பு பயணத்திற்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும்.
* ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. 35 வயது வரையிலான மாணவர்கள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான பயண டிக்கெட்டுகளில் இந்திய ரெயில்வே 50 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடி ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளில் கிடைக்கிறது.
* ஒரு மாணவர் பணி முகாமில்(work-camp) பங்கேற்கப் போகிறார் என்றால், அவர்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளில் 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
* இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம் அல்லது கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு பயணம் செய்தால், ஸ்லீப்பர் வகுப்பு ரெயில் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் விடுமுறை நாட்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பயணம் செய்வதற்கும் இதே தள்ளுபடி வழங்கப்படுகிறது.
* அதுமட்டுமின்றி இந்திய ரெயில்வே, சென்னை போன்ற நகரங்களில் தினமும் ரெயிலில் பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு பொது வகுப்பின் மாதாந்திர சீசன் டிக்கெட்டை இலவசமாக வழங்குகிறது.