
வீட்டு மின் இணைப்புப் பெயரை மாற்ற ஒருசில ஆவணங்களை மின்சார வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இருப்பினும் இதற்கு பொதுமக்களிடம் ஏராளமான ஆவணங்களை மின்வாரியம் கேட்பதால், தேவையின்றி காலதாமதம் ஏற்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனால் தேவைப்படும் ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தற்போது மின்வாரியம் முன்வந்துள்ளது. இதன்மூலம் வீட்டு மின் இணைப்புப் பெயரை மாற்றுவது விரைவாகவும், எளிதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மின் இணைப்புப் பெயரை மாற்றிக் கோரி அவ்வப்போது ஏராளமான விண்ணப்பங்கள் மின்சார வாரியத்திற்கு வருகின்றன. ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பங்களின் மூலம் தற்போது பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மின் இணைப்புப் பெயரை மாற்ற முந்தைய உரிமையாளரிடம் இருந்து ஒப்புதல் பெற படிவம் 2-ஐ பூர்த்தி செய்வது அவசியமாக இருந்தது. இந்நிலையில் இந்தப் பணிகளை விரைவுபடுத்த இனி படிவம் 2-ஐ பொதுமக்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களைப் பிரித்தல், விற்பனை மற்றும் பரிசளிப்பு போன்ற சமயங்களில் மின் இணைப்புப் பெயரை மாற்ற சொத்து வரி ரசீது, விற்பனைப் பத்திரம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதும். இவ்வகையான பெயர் மாறுதலுக்கு மட்டும் ஒப்பதல் கடிதம் கூடுதல் ஆவணமாக அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
குடும்பத்தில் மின் இணைப்பு பெற்ற நபர் இறந்து விட்டால், மின் இணைப்புப் பெயரை மாற்ற வாரிசு சான்றிதழ் அல்லது அண்மையில் பெறப்பட்ட சொத்து வரி ரசீதை சமர்ப்பித்தால் போதுமானது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரிய ஊழியர்களும், தலைமைப் பொறியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் 24 மணி நேர சேவை எண் 1912-ஐ பொதுமக்கள் அழைக்கலாம்.
மின் வாரியம் சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் மூலம் பொதுமக்கள் மின் இணைப்புப் பெயரை எளிதாக மாற்றிக் கொண்டனர். அதற்குப் பின் முகாம்கள் எதுவும் நடக்கவில்லை என்பதால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை தாழ்வழுத்தப் பிரிவில் மின் இணைப்புப் பெயரை மாற்ற ரூ.645 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் ஏராளமான ஆவணங்களை மின்வாரியம் கேட்பதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது மின் இணைப்புப் பெயரை மாற்றுவதில் ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது மின் வாரியம். மேலும் அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.