உங்க ஏரியாவில் காற்று சுத்தமா இருக்கா?: இனி கூகுள் மேப்ஸ் நொடியில் சொல்லும்!!

google maps aqi tracker
google maps aqi tracker
Published on

கூகுளின் தொழில்நுட்ப வசதிகள் பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத பல்வேறு விஷயங்களை பெறுவதற்கு உதவிகரமாக இருந்து வருகிறது. அதில் கூகுள் மேப் மிகவும் முக்கியமானது. இந்த கூகுள் மேப்ஸில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் செல்வதற்கு வழிகாட்டுகிறது. புதிதாக ஒரு ஊருக்கு செல்வோர் யாருடைய உதவியுமின்றி கூகுள் மேப் பயன்படுத்தி சுற்றி வர முடியும். கல்வி, சுற்றுலா, வர்த்தகம், பொழுதுபோக்கு எனப் பல்வேறு தரவுகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது.

இதில் பொதுப் போக்குவரத்து, போக்குவரத்து நெரிசல், பைசைக்கிளிங், 3டி, ஸ்ட்ரீட் வியூவ் எனப் பல்வேறு விதங்களில் மேப்பை பார்க்கலாம். இது பயணம் மேற்கொள்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் தற்போதைய முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது காற்று மாசுபாடு. (Pollution). அதிலும் இந்தியாவில் டெல்லி உட்பட பல முக்கிய நகரங்களில் தற்போது காற்று மாசுபாடு (Pollution) அபாயகரமான அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. அந்த வகையில் சமீபத்திய அப்டேட்டாக கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கூகுள் மேப்ஸ்-ல் இருக்கும் எண்களை நம்ப வேண்டாம். நூதன முறையில் நடக்கும் மோசடிகள். 
google maps aqi tracker

அதாவது உலகின் 40-க்கும் அதிகமான நாடுகளில் நிகழ்நேர AQI கண்காணிப்பு (Real-time AQI Tracker) எனும் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் பகுதியில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உடனே தெரிந்துகொள்ள முடியும். இதற்கு முன்பு கூகுள் மேப்ஸில் இருந்த AQI அளவீடுகள் தாமதமாகவே காட்டுவதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தின் லைவ் காற்றின் தரத்தை சரிபார்க்க முடியும்.

இந்த நிகழ்நேர AQI கண்காணிப்பு மூலம் நீங்கள் காற்றின் தரத்தை பற்றி துல்லியமாக அறிந்து கொண்டு வெளியில் செல்லும் போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் காற்றின் தரத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கூகுள் மேப்ஸ் ஒரு வண்ணக் குறியீட்ட பயன்படுத்துகிறது.

காற்றின் தரத்தை அறிந்து கொள்வது எப்படி?

* 0-50 வரை உள்ள AQI வரம்பு நல்லது (Good) என்று பச்சை பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம். காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளதால் தைரியமாக வெளியில் செல்லலாம்.

* 51-100 வரை உள்ள AQI வரம்பு ஆனது திருப்தி (Satisfactory) என்று மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது காற்றின் தரம் ஏற்கத்தக்க நிலையில் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

* 101-200 வரை உள்ள AQI வரம்பு மிதமானது (Moderate) என்று ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இதனால் சிலருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது நல்லது.

* 201 -300 வரை உள்ள AQI வரம்பு மோசம் (Poor) என்று சிவப்பு (Red) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். சிவப்பு நிறத்தில் இந்த AQI வரம்பு காட்டினால் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல நேர்ந்தால் நீண்ட நேரம் வெளியில் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது.

* 301-400 வரை உள்ள AQI வரம்பு ஆனது மிக மோசம் என்று ஊதாநிறத்திலும், 401-500 வரை உள்ள AQI வரம்பு அபாயம் (Critical) என்று கருஞ்சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டு இருக்கும். இந்த AQI வரம்பு இருந்தால் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாகவும், தீவிர சுகாதார எச்சரிக்கை தேவை என்றும் கூறப்படுகிறது.

மேலே கூகுள் மேப்ஸ் மூலம் AQI காற்று மாசுபாட்டின் வரம்பை அறிந்து கொண்டு நீங்கள் வெளியில் செல்வது சரியான நேரமா அல்லது மாஸ்க் அணிவது போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தேவையா என்பது குறித்து உடனே அறிந்து கொள்ள முடியும்.

Google Maps-ல் AQI-ஐ பார்ப்பது எப்படி?

* உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS போனில் உள்ள Google Maps செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து உள்ளே சென்று நீங்கள் அறிய விரும்பும் நகரம் அல்லது இருப்பிடத்தை தேர்வு செய்யவும்.

* அடுத்து மேப்பின் வலதுபுறத்தில் உள்ள 'layers' ஐகானை கிளிக் செய்து அதில் 'Air Quality' என்பதைத் தேர்ந்தெடுத்தால் AQI அளவையும் பிற தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
புதிய அவதாரம் எடுக்கும் கூகுள் மேப்ஸ்
google maps aqi tracker

கூகுள் மேப்ஸ் AQI வரம்பு மூலம் உங்கள் பகுதியில் காற்றின் தரத்தை மிகவும் எளியமுறையில் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், காற்று மாசில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் எடுத்துக்கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com