

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் முதற்கட்டமாக 50 திருநங்கைகள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் 2025-2026 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், 50 திருநங்கைகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி தகுதி வாய்ந்த திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு ஊர்க்காவல் படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இன்று தேர்வான திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2025-2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், திருநங்கைகளுக்கு உரிய விழிப்புணர்வையும், சம வாய்ப்பை வேலைவாய்ப்புகளில் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு கண்ணியமான வாழ்வினை உறுதி செய்ய முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. இதை முன்னிறுத்தி ஒரு முன்னோடி முயற்சியாக திருநங்கையர்களுக்கு பயிற்சிகள் வழங்கி ஊர்காவல் படையில் ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 50 திருநங்கைகளைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கு இணங்க காவல்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊர்க்காவல் படை- காவல்துறை தலைவர் அவர்களால் 50 திருநங்கைகளை தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய காவல் ஆணையரகங்களிலிருந்து 7 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை இன்று முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தாம்பரத்தில் 15 நபர்கள், ஆவடியில் 10 நபர்கள், மதுரையில் 7 நபர்கள், கோயம்புத்தூரில் 7 நபர்கள், திருச்சியில் 6 நபர்கள் மற்றும் சென்னையில் 5 நபர்கள் என மொத்தம் 50 திருநங்கைகள் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் பயிற்சிகளை வழங்கி ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.