

நாளை மறுதினம் (ஜனவரி 15) பொங்கல் பண்டிகை, தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 ரொக்கப் பணத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பொங்கல் பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுக் கெள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 13) முடிவடைகிறது.
இருப்பினும் வெளியூரில் வசிப்போர் பொங்கல் பரிசுத் தொகையை வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடாக நாளை ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கு கைரேகை பதிவு கட்டாயம் என்ற சூழலில், சிலருக்கு கைரேகை விழாததால் பொங்கல் பரிசுத் தொகை மறுக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் கைரேகை விழவில்லை என்றாலும் பொங்கல் பரிசு உறுதியாக கிடைக்கும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2.27 கோடி ரேசன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இதில் 2.22 கோடி அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை 80%-க்கும் மேல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசைப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இன்னமும் பொங்கல் பரிசை வாங்காதவர்கள், இன்று வாங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கைரேகை பதிவு சரியாக விழாத பலருக்கும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழக அரசின் ஆணைப்படி அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு நிச்சயமாக கிடைக்கும். ரேசன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். கருவியில் கைரேகை விழாதவர்களுக்கு, கருவிழிப் பதிவு எடுக்கப்படும். கருவிழிப் பதிவும் சரியாக விழவில்லை என்றால், ரேசன் அட்டையில் உள்ள புகைப்படத்தை சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும்.
டோக்கன் வழங்கப்பட்ட அனைவருக்கும் பொங்கல் பரிசு நிச்சயமாக கிடைக்கும். ரேசன் அட்டை உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தாலே போதுமானது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இணையப் பிரச்சினை உள்ளது. இதனால் கூட சில நேரங்களில் கைரேகை பதிவு விழாமல் இருக்கலாம். இருப்பினும் பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பரிசுத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த ரேசன் கடையில் கார்டு பதிவாகி உள்ளதோ, அங்கு தான் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களால் பெற முடியும். ஆகையால் வெளியூரில் வசிப்போர் சொந்த ஊருக்கு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கும் விதமாக, கூடுதலாக ஒருநாள் (ஜனவரி 14) ஒதுக்கப்பட்டுள்ளது.