அலட்சியத்தால் பறிபோன உயிர்! மாநகராட்சி, மின்வாரிய பொறியாளர்களுக்கு காவல் துறை சம்மன்!

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!: அண்ணாநகர் சோகம் - மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சம்மன்!
மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பெண் பலிsource:etvbharat
Updated on

மாநகராட்சி சார்பில் கேபிள் இணைப்பு மற்றும் பிற பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் அதில் தேங்கும் மழை நீரில் கசியும் மின்சாரம் போன்றவற்றால் ஏற்படும் கவலை தரும் உயிர் இழப்புகளுக்கு சான்றாக உள்ளது சமீபத்தில் இறந்த இந்தப் பெண்ணின் மரணம்.

சென்னை அண்ணாநகரில் கடந்த 23ம் தேதி மழைநீரில் விழுந்த கலாவதி(59) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சி அளித்துள்ளது. மின்சாரம் தாக்கி கலாவதி உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியான நிலையில் மின்வாரிய, மாநகராட்சி உதவி பொறியாளர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், அரசு ஊழியர்கள் யார் என்ற விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

அண்ணாநகரில் உள்ள இனிப்புக் கடையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த கலாவதி எனும் பெண்மணி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அண்ணாநகர் டவர் மெட்ரோ அருகே 2-வது/5-வது அவென்யூ பகுதியில், சுமார் 1.5 அடி ஆழம் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

முதலில் அவர் பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததாகவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், அந்த நேரத்தில் மின்கசிவு இல்லை என்றும் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அவரை மீட்க முயன்ற சிலர் மின்சாரம் தாக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்ததால், மின்கசிவு குறித்த சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சந்தேகம் உறுதியானது போல திடீர் திருப்பமாக முதற்கட்ட உடற்கூறாய்வு முடிவைத் தொடர்ந்து இறுதி உடற்கூறாய்வு அறிக்கையிலும் மின்சாரம் தாக்கியதே மரணத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL/மின்வாரியம்) மின்சாரம் எங்கிருந்து கசிந்தது என்பதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை என்றும் மின்வாரியக் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் கசிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறிய நிலையில், மாநகராட்சி பராமரிக்கும் தெருவிளக்கு கேபிள்கள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.

அத்துடன் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்தைச் சேர்ந்த உதவிப் பொறியாளர்களிடமும் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பணியாற்றிய ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் பங்கும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அலட்சியம் மற்றும் கவனமின்மை காரணமாக நிகழ்ந்த இந்த துயர சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்ட முக்கியமான இரண்டு துறைகளான மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மரணம் நமக்கு மழை நீர் மற்றும் மின்சாரம் பற்றிய எச்சரிக்கை விழிப்புணர்வை தந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் “மழைநீரில் விழுந்து உயிரிழப்பு” என்ற செய்தியாக மட்டுமல்லாமல் மழைநீர் தேங்கிய இடத்தில் மின்கசிவு இருந்ததா, பள்ளம் ஏன் உடனடியாக மூடப்படவில்லை, பள்ளம் இருந்த இடத்தில் எச்சரிக்கை தடுப்புகள் ஏன் அமைக்கப்படவில்லை, எந்தத் துறையின் கேபிள் மூலம் மின்சாரம் பாய்ந்தது போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும், தொடக்கத்தில் அந்த பள்ளம் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் மாநகராட்சி தரப்பில் அந்த இடத்தில் வடிகால் பணி ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும், பள்ளம் வேறு காரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே கலாவதியின் மரணத்துக்கு இறுதி விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை வந்த பிறகே முழுமையான பொறுப்பை நிர்ணயிக்க முடியும் என சொல்லப்படுகிறது..

எனினும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேராத வகையில் மாநகராட்சி மற்றும் மின்வாரியம் பொறுப்புடன் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து. பொதுமக்களும் மழை சமயங்களில் கவனமுடன் இருப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
கழுத்து கருமை: இது வெறும் அழுக்கு இல்லை... உடலுக்குள் இருக்கும் நோயின் ரகசிய அறிகுறி!
மின்சாரம் தாக்கி பெண் பலி
logo
Kalki Online
kalkionline.com