

சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னையை உலகத் தரமிக்க நகராக மாற்றும் வகையிலும் சாலை, கடல்வழி, மெட்ரோ, விமான போக்குவரத்து என பல்வேறு பல்வேறு போக்குவரத்துகளை முன்னெடுத்து வருகிறது அரசு.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA).சாத்தியக்கூறு ஆய்வில் சுமார் ₹5,000 கோடி அளவிலான திட்டத்துக்கான சாத்தியக்கூறு மதிப்பீடு செய்யப்பட்டதாக 2025-ல் தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போதைய அரசு இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் படி சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் நீர் வழியாக விளங்கும் பக்கிங்காம் கால்வாயில், வாட்டர் மெட்ரோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகள் வழியாக சுமார் 796 கி. மீட்டர் தூரத்துக்குப் பயணிக்கும் பங்கிங்காம் கால்வாய், தமிழ்நாட்டில் மட்டும் 160 கி.மீ. செல்கிறது. 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக திகழ்ந்த பக்கிங்காம் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவு நீர் வெளியேற்றத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கிட்டத்தட்டஅரை நூற்றாண்டுக்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் இயக்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ வாட்டர் திட்டம் என்பது மெட்ரோ ரயில் போலவே அதிநவீன வசதிகளுடன், நீர்நிலைகளில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட படகுப் போக்குவரத்து முறையாகும் . இது நிலப்பரப்பு மெட்ரோ சேவைகளுடன் இணைக்கப்பட்டு, நகரத்தின் நீர்வழிப் பகுதிகள் மற்றும் தீவுகளை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்துச் சேவையாகும். மெட்ரோ ரயில்களைப் போலவே தானியங்கி பயணச்சீட்டு முறை, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் நவீன முனையங்களைக் கொண்டு மக்களுக்கு சொகுசான பயணத்தை வழங்குவது நிச்சயம் என்கின்றனர்.
மெட்ரோ வாட்டர் திட்டத்தின் முதல் மைல்கல்லாக இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் என்ற பெருமையுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு கேரளத்தின் கொச்சியில் சுமார் ரூ. 1,000 கோடி திட்ட மதிப்பீட்டில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு மெட்ரோ ரயில் போன்றே குளிரூட்டப்பட்ட வசதி, தானியங்கி பயணச்சீட்டு வசதிகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக கொச்சியில் ஏற்கனவே மின்சாரப் படகுகள் மூலம் நீர்வழிப் பொதுப் போக்குவரத்து இயங்கி வருகிறது. அங்கு 75-க்கும் மேற்பட்ட மின்சாரப் படகுகள் மற்றும் 15 வழித்தடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தளங்கள் தெரிவிக்கின்றன. சென்னை நிலப்பரப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 10 நீர் வழி பாதை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தின் முதற்கட்டமாக, எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீக்கு படகு போக்குவரத்து சேவை அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் நீர் வழித்தடங்களாக சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கடலோர நீர்வழிகளை இணைத்து பயன்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் முக்கியமானவை எனினும் நீர்வழிகளை முதலில் தூர்வாரி, ஆழப்படுத்தி, மாசுபாட்டை குறைத்து, படகுகள் செல்லக்கூடிய நிலையில் மீட்டெடுப்பது அவசியம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கேரளாவின் கொச்சி வாட்டர் மெட்ரோ மாதிரியை சென்னை பின்பற்றும் வகையில் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டம் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டில் வருவதற்கு சுமார் 5 வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயண நேரத்தை மீதப்படுத்தி, நீர்வழியே உற்சாகமாக பயணம் செய்யும் வகையில் அமையப் போகும் மாற்று பொதுப் போக்குவரத்தாக எதிர்காலத்தில் இந்த வாட்டர் மெட்ரோ அமையப் போவது உறுதி.
மேலும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் இத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.