

சென்னை, கோயம்புத்தூர் (தமிழ்நாடு), எர்ணாகுளம் (கேரளா) ஆகிய நகரங்களில் தெற்கு ரயில்வேயின் ரயில் சேவைத் திறனை 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி சென்னை, கோயம்புத்தூர், எர்ணாகுளம் (கொச்சி) ஆகிய தெற்கு ரயில்வேயின் முக்கிய இரயில் முனையங்களை விரிவாக மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நெரிசலைக் குறைப்பதற்காகப் பல்வேறு நகரங்களில் முனையங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை விரிவுபடுத்தி வருவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூடுதல் நடைமேடைகள், வண்டி நிறுத்துமிடங்கள் (Pit lines), புதிய முனையங்கள், பராமரிப்பு வசதிகள் மற்றும் பலவழித்தடப் பணிகள் மூலம் விரைவான வளர்ச்சி சாத்தியமாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் திறனை இரட்டிப்பாக்க அடையாளம் காணப்பட்ட இந்தியாவின் 48 முக்கிய நகரங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரும் அடங்கியுள்ளன.
முக்கியத் திட்டங்கள்:
சென்னை எழும்பூர்: ₹735 கோடி மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளில் இரண்டு குளிரூட்டப்பட்ட முனையக் கட்டிடங்கள், 44 மின்தூக்கிகள் (Lifts), 31 மின்படிக்கட்டுகள் (Escalators) மற்றும் 14,000 சதுர மீட்டர் பரப்பளவிலான காத்திருப்பு அரங்கம் ஆகியவை அமையும்.
தாம்பரம்: 9 மின்தூக்கிகள் மற்றும் புறநகர் சேவைக்கான மேம்பட்ட ஒருங்கிணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பெரம்பூர்: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் நிலையங்களின் நெரிசலைக் குறைக்க, ₹342 கோடி செலவில் ஏழு நடைமேடைகளுடன் புதிய முனையம் உருவாக்கப்படும்.
கோயம்புத்தூர்: போத்தனூர் சந்திப்பு ₹100 கோடி முதலீட்டில் இரண்டாவது முனையமாக (Satellite Terminal) மாற்றப்படும். கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையம் ₹11.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கோயம்புத்தூர் சந்திப்பு பொது-தனியார் கூட்டுறவுத் திட்டம் (PPP) ₹692.65 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை (DPR) நிலையில் உள்ளது.
எர்ணாகுளம் (கொச்சி): எர்ணாகுளம் டவுன் ரயில் நிலைய மறுசீரமைப்பு ₹150.28 கோடி மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது முதல் கட்டப் பணிகள் நிலையத்தின் தென்பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகளின் போது, பயணிகளின் சேவைக்கு எவ்விதத் தடையுமின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் ரயில்வே உள்கட்டமைப்பில் எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் டவுன் மற்றும் திருப்பூணித்துறை நிலையங்கள் ஆகியவையும் அடங்கும். இவை பெருமளவிலான ரயில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தைக் கையாளும் நிலையில், கொச்சியின் வர்த்தக, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவும். மேலும், நாட்டின் மற்ற பகுதிகளுக்குத் தடையற்ற ரயில் இணைப்பையும் இது உறுதி செய்யும்.
இதன் முதற்கட்டப் பணிகள் நிலையத்தின் தென்பகுதியில் நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் குடியிருப்புகள், பார்சல் அலுவலகம், நிலைய மேலாளர் (SM) அறை, துணை மின்நிலையம் மற்றும் OFC (Optical Fibre Cable) அறைகள் போன்ற ஏற்கனவே இருந்த வசதிகள், கட்டுமானப் பணிகளை எளிதாக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்திலும் கேரளாவிலும் உள்ள ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.