

சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட இருந்த முக்கிய நடைபாதை திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ரூ. 284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்டப் பணிக்கான 35 டெண்டர்களை சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்துள்ளது. நடைபாதை திட்டங்களில் பல முறைகோடுகள் உள்ளதாக எழுந்த புகாரில் இந்த 35 டெண்டர்களையும் மாநகராட்சி ரத்து செய்துள்ளது. திட்டச் செலவை செயற்கையாக அதிகரித்தது, ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டரை அமைத்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெண்டர் ரத்துக்கான காரணங்கள்:
திட்ட அறிக்கையில் பல தேவையில்லாத கூடுதல் பணிகளைச் சேர்த்து அதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்த முயன்றது வெட்டவெளிச்சமாகி உள்ளது. திட்ட மதிப்பீடுகள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் வரிப் பணமும் வீணடிக்கப்படும். எனவே இதனை தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாதகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
அனுமதிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் தேவையற்ற சில பணிகளும் சேர்க்கப்பட்டு இருந்தன. டெண்டர்களை ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்ட நிலையில் திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு விதமான குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது மாதிரியான காரணங்களால் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் இந்த முறைகேடான கூட்டு, அரசு கஜானாவிற்கு நிச்சயம் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று தற்போதைய நிர்வாகம் சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இத்திட்டம் முழுமையாக கைவிடப்படாது என்றும், மறு ஆய்வு செய்யப்பட்டு விரைவில் புதிய டெண்டர்கள் கோரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்ட 35 டெண்டர்களின் திட்ட அறிக்கை முழுமையாக மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒரு மீட்டருக்கு நடைபாதை அமைக்க வழக்கமான விலையை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே திருத்தப்பட்ட புதிய மதிப்பீடுகளுடன் நடைபாதை அமைப்பதற்கான டெண்டர்கள் மீண்டும் முறையாக வெளியிடப்படும்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுப்பணிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அவை திருத்தப்பட்ட புதிய மதிப்பீடுகளுடன் மீண்டும் புதிய டெண்டர்களாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு செயற்கையாக மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாதகமாகவும், பிற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலும் டெண்டர் விதிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. திட்டத்திற்கு முந்தைய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்தத் திட்ட அறிக்கை முழுமையாக மறு ஆய்வு செய்யப்படும். நடைபாதை திட்டப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும், புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.