சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி வேற லெவல் வெல்கம்! 'சென்னை கேட்-வே' திட்டம் அறிவிப்பு!

ரூ.10.50 கோடியில் 'கேட் வே ஆஃப் சென்னை'!: விமான நிலையச் சாலையை சர்வதேசத் தரத்தில் மாற்ற மாநகராட்சி அதிரடித் திட்டம்!
சென்னை கேட் வே திட்டம்
சென்னை கேட் வே திட்டம்source:AI Image
Updated on

சென்னையில் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற திட்டத்தின் கீழ் 4.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை 'கேட் வே' என்ற பெயரில் நவீன முறையில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டதுடன் இந்த பணிகளுக்காக ரூ.10.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.மேலும் இந்தப் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான போக்குவரத்து மற்றும் மின்/குழாய் மாற்றுப் பணிகள் நிறைவடைந்த பிறகு திட்டப் பணிகள் தொடங்கும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கேட் வே (Gateway of Chennai) என்பது "சென்னையின் வரவேற்பு நுழைவாயில்" அல்லது "சென்னையின் முகப்பு" என்பதாகும். சென்னை விமான நிலையத்திலிருந்து நகருக்குள் நுழையும் முக்கிய சாலையை சென்னையின் அடையாளமாகவும், அழகிய வரவேற்புப் பாதையாகவும் மாற்றுவது மட்டுமின்றி

அந்தப் பகுதியை பசுமை சூழலில் கலைப்பணிகள், சிற்பங்கள், அலங்கார விளக்குகள், அழகிய நடைபாதைகள் ஆகியவற்றுடன் மேம்படுத்தி, சென்னை நகரின் முதல் தோற்றத்தை சிறப்பாகக் காட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் கேட் வே விமானம் மூலம் சென்னைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமாக அமையும் என சொல்லப்படுகிறது.

இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில் இரு பகுதிகளாக பிரித்துள்ளது சென்னை மாநகராட்சி. விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடியும், விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய வி.ஐ.பி. பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு கூறுகிறது.

சென்னைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் தமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் (தீம் ) கருப்பொருள் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன. மேலும் அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையானதாக உருவாக்கப்படும்.

மேலும், விமான நிலைய வி.ஐ.பி. நுழைவாயில் அருகேயுள்ள பூங்கா மற்றும் மாநகராட்சிப் பூங்கா நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுவதுடன் இரவு நேரங்களில் நுழைவு வாயிலின் அழகை மேலும் அதிகரிக்கும் வகையில் அலங்கார மின்விளக்குகள், அலங்கார மரங்கள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும் எனத் தெரிகிறது.

Chennai corporation
Chennai corporation

இந்த மேம்பாட்டுத் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அளித்த பேட்டி ஒன்றில் 'இது வெறும் சாதாரண அழகுபடுத்தல் பணி அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐதராபாத் அல்லது பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இதற்காகத் தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப்படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் "இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும். அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும் .

இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஒப்பந்ததாரருக்கு பணிகளை முடிக்க 4 மாதங்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த வழித்தடத்தை முழுமையாகப் பராமரிக்கும் பொறுப்பும் அதே ஒப்பந்ததாரரிடமே ஒப்படைக்கப்படவுள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய பொலிவூட்டும் திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் விமானம் மூலம் சென்னைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத கலாச்சாரம் மற்றும் மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக மனமகிழ்வு தரும் அழகிய அனுபவத்தை நிச்சயம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் நமது பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் இந்த திட்டம் நிச்சயமாக பெருமிதம் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் OTT-ல் என்ன பார்க்கலாம்? ரசிகர்களுக்காக காத்திருக்கும் தமிழ் படங்கள் & வெப் சீரிஸ்கள்..!!
சென்னை கேட் வே திட்டம்
இதையும் படியுங்கள்:
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: பயம் வேண்டாம், முழுமையான வழிகாட்டி!
சென்னை கேட் வே திட்டம்
logo
Kalki Online
kalkionline.com