

சென்னையில் அனுமதியின்றி மாநாட்டிற்காக தற்காலிகக் கொடிக்கம்பங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொடிக்கம்பங்கள் மற்றும் சிலைகள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தனியார் நிலங்களில் புதிய சிலைகள் நிறுவுவதற்கோ, புதிய கொடிக்கம்பங்கள் நிறுவுவதற்கோ வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் பிரச்சாரம், கூட்டம், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா, விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு என 4 வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல உதவி ஆணையர் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஒரு மண்டலத்திற்கு ஒரு துணைக் குழு விதம் 15 மண்டலங்களுக்கு 15 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துணைக் குழுக்கள் மேற்கண்ட சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக்கம்பங்களை நடுவதற்கான விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் குறிப்பிட்ட நிகழ்விற்காக நடும்பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது நிகழ்வின் பெயர், நடைபெறும் நாள், கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை, துணியா அல்லது நெகிழியா போன்ற கொடியின் வகை, மரம் உலோகம் போன்ற கொடிக்கம்பத்தின் வகை போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். அப்படி விண்ணப்பம் செய்ததும், விண்ணப்பதாரருக்கு ஒரு OTP வரும். அதைத் தொடர்ந்து விண்ணப்பதாரிடம் கேட்கப்படும் இதர தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
மதசார்பான நிகழ்வுகளுக்கு 7 நாட்களும், மதசார்பில்லாத நிகழ்வுகளுக்கு 3 நாட்களும் கொடிக்கம்பங்கள் நட அனுமதி வழங்கப்படும். விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டவுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அளவிலான துணைக் குழுவின் பரிந்துரைக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, அந்தந்த மண்டலங்களில் உள்ள தலைமை பொறுப்பாளரான துணை ஆணையரால் அனுமதி வழங்கப்படும். அப்படி பெறப்பட்ட அனுமதி விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
தற்காலிக கொடி கம்பங்கள் அமைப்பதற்கான நெறிமுறைகள்:
கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் உயரம், கொடிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள், கொடிக்கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி தூரம், நிறுவப்படும் இடங்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
தற்காலிக கொடிக்கம்பங்கள் தார் சாலையின் மண் பரப்பில் மட்டுமே அமைக்க அனுமதிக்கப்படும். கொடிக்கம்பங்கள் அமைப்பதால் எந்த விபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சாலையோரங்களில் அமைக்கும் பொழுது தற்காலிக கொடிக்கம்பங்கள் மின்சாரம் கடத்தாத வகையில் இருக்க வேண்டும்.
ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கொடிக்கம்பங்களை அமைத்த விண்ணப்பதாரரே அதற்கு முழு பொறுப்பேற்பதுடன், பாதிக்கப்பட்ட நபரின் எந்தவொரு இழப்பையும் விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
கொடிக்கம்பங்களை நிறுவும் பொழுது பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுடன், கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் அவற்றை தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு தற்காலிக கொடிக்கம்பம் அமைப்பதற்கான நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.