

உலகின் டாப் நகரங்களுடன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரமும் போட்டி போடும் அளவிற்கு எண்ணற்ற வசதிகள் வந்துவிட்டன. சென்னையின் அடையாளத்தை மேலும் உயர்த்திய பெருமை மெட்ரோ ரயிலுக்கு உண்டு.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் சென்னையில் பணிபுரிகின்றனர். எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்த சென்னை மாநகரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் சென்னையின் இந்த வளர்ச்சி யாருக்காக என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு நகரம் வளர்ச்சி அடையும் போது, அங்கு சாமானிய மக்கள் வாழ்வது என்பது மிகப்பெரிய சவால் தான்.
ஏனெனில் வளர்ச்சியடைந்த ஒரு நகரத்தில் விலைவாசி உயர்வு, சாமானிய மக்களை வாழ விடாது. அப்படியே வாழ்ந்தாலும் அது ஒரு நிதிப் போராட்டம் நிறைந்த கடினமான வாழ்வாகத் தான் இருக்கும்.
நேற்று (ஆகஸ்ட் 22) தான் 380-வது சென்னை தினம் கொண்டாடப்பட்டது. எண்ணற்ற மக்களுக்கு வாழ்வளித்த சென்னை மாநகரம், தமிழ்நாட்டின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. 15 வருடங்கள் முன்னோக்கி போனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இல்லை; மேம்பாலங்களின் எண்ணிக்கை குறைவு; அதிநவீன வசதிகள் கிடையாது. ஆனால் இப்போது அனைத்துமே இருக்கிறது. மேலும் மெட்ரோ ரயில் சேவையும் விரிவாக்கமும் செய்யப்பட்டு வருகிறது.
அதிநவீன வளர்ச்சியால் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் வீட்டு வாடகை உயர்வதோடு, சொத்துக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய சூழலுக்கு சென்னையில் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்தாலே தனி மரியாதை தான். வெளிமாவட்ட மக்கள் பெரும்பாலும் வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வீட்டு வாடகையை விட இப்போது மிகவும் அதிகம். சென்னையின் வளர்ச்சி நன்மை தான் என்றாலும், இது சாமானிய மக்களை விலைவாசி உயர்வு என்ற பெயரில் கலங்கடிக்கிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைத் தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று வரையிலும் வசதி படைத்தவர்கள் தான் மெட்ரோ ரயிலில் அதிகம் பயணிக்கிறார்கள். இதற்கு டிக்கெட் கட்டணம் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், பாமர மக்களுக்கு இந்த வசதிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் சென்னையில் வீட்டு வாடகை விலை சரிந்தது. அதற்குப் பின் வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் விலையும் அபரிமிதமாக உயர்ந்தது.
இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. பலருக்கும் சொந்த வீடு என்பது பெருங்கனவாக இருக்கும் நிலையில், இதற்கு வங்கியில் வழங்கப்படும் வீட்டுக் கடன் தான் உதவுகிறது.
ஆனால் இது நீண்ட கால கடன் என்பதால், கடன் முடிந்து வீட்டை சொந்தமாக்கிக் கொள்வதற்குள் பாதி வாழ்க்கையே முடிந்து விடும். ஆக மொத்தத்தில் சென்னையின் வளர்ச்சி எளிமையானவர்களுக்கு உதவாது என்பதே நிதர்சனம்.
இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் எளிமையானவர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியும் எழுந்து விடும். விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மங்கள் சென்னையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு நகரத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவ வேண்டும். வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உதவுவது உண்மையில் வளர்ச்சியே அல்ல. பாரம்பரியம் மிகுந்த சென்னை மாநகரத்தில் இப்போது வசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கை கூட அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நிலை தொடரும் பட்சத்தில் எளிய மக்களுக்கான நகரமாக சென்னை இருக்காது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.