

தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக பேருந்து போக்குவரத்தையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்து பயணத்தில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக பேசவோ அல்லது ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்கவோ கூடாது என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
பேருந்து பயணிகளின் பயண அனுபவத்தை உயர்த்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இதற்கான டெண்டரை ஆன்லைனில் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் Wi-Fi இணைய வசதி மற்றும் சார்ஜிங் சென்டர்களை ஆங்காங்கே அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் அதிவேக Wi-Fi வசதியை அமைக்க இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களை ஸமார்ட்டாக மாற்றவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை ‘ஸ்மார்ட் பஸ் ஸாடாப்’ ஆக மாற்றுவதற்கான டெண்டரை இன்று (ஆகஸ்ட் 14) அறிவித்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம். இத்திட்டத்தின் படி பேருந்து நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதோடு, அதிவேக Wi-Fi இணைய வசதி, சார்ஜிங் சென்டர் மற்றும் பேனிக் பட்டன் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை எண்ணூரில் இருந்து மகாபலிபுரம் வரை வாட்டர் மெட்ரோவைத் தொடங்குவதற்கான அறிவிப்பு நேற்று (ஆகஸ்ட் 13) தான் வெளியானது. இந்நிலையில் இன்று பயணிகளின் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள் துருப்பிடிக்காத எஃகு உலோகத்தால் உருவாக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர காலத்தில் பயணிகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை இணைப்புகள் பொருத்தப்பட உள்ளன.
மொபைல் சார்ஜ் வசதி மட்டுமின்றி, மின்சார வாகனப் பயனர்களின் வசதிக்காக EV சார்ஜிங் சென்டர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி மற்றும் அசோக் நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மற்ற மாநகராட்சி திட்டங்களின் கீழ், துருப்பிடிக்காத எஃகு பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகை நேரத்தை அறியும் வகையில் டிஸ்பிளே போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் சென்னைப் பேருந்து நிலையங்கள் வேற லெவலில் மாற உள்ளன.
ஒருபுறம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடக்கும் சூழலில், ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை அமைப்பதில் சற்று சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் சவாலான சூழ்நிலைகளைக் கையாண்டு, விரைவில் ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை அமைப்போம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் ஏசி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் நிழற்குடைகளை அமைப்பதற்கான ஆலோசனைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தகவல் பயணிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.