

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, இந்த வழித்தடங்களில் தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.70 வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
பயணிகளுக்கு விரைவான, நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கி வருவதால், இதில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
தொடக்க காலத்தில் 10,000, 15,000, 50,000 என இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை பெருநகரத்தில் நெரிசல் இல்லாத சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழங்கி வருகிறது.
அதேசமயம் மெட்ரோவில், ஹெட்ஃபோன் இன்றி ஸ்பீக்கர் மோடில் பாட்டு கேட்பது அல்லது சத்தமாகப் பேசுவது, போதைப்பொருட்கள் மற்றும் சீல் வைக்கப்படாத மதுபானங்களை கொண்டு செல்வது, மீன் மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் காட்சிப்படுத்தப்படும் சில வணிக விளம்பரங்கள் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் மெட்ரோ ரயில் பெட்டியின் உள்ளே பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், அவர்களைத் தவறான முறையில் சித்தரிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில், பெண் தோழி உங்களுக்கு 0% வட்டி/ஆதாயமே தரலாம், ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி 14.40% வட்டி தருகிறது என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த அந்த விளம்பரப் பலகை சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சு. வெங்கடேசன் எம்பி இதற்கு எதிராகத் தனது எக்ஸ் தளத்தில் கடுமையான கண்டனத்தை வலுவாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பெண்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக நடத்துவதும், அவர்களை ஒரு லாபகரமான பொருளாக மட்டுமே முன்னிறுத்துவதும் இந்த விளம்பரத்தின் மூலம் வெளிப்படுவதாக அவர் சாடியுள்ளார்.
அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
‘சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரெயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன.
குறிப்பாக, மெட்ரோ ரெயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், ‘பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான ஆணாதிக்க மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.
பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்திற்குரியது.
மெட்ரோ ரெயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது.
இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனைத் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்’.
மேலும், இத்தகைய ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட விளம்பரங்கள் பெண்களின் சுயமரியாதையையும், சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் கண்ணியத்தையும் நேரடியாகக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஐடியு (CITU)மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
‘சென்னை மெட்ரோ ரெயிலில் இப்படி ஒரு விளம்பரம் நியாயமா? முதலாளித்துவம் பெண்களைப் ஒரு போக பொருளாக, விளம்பரப் பொருளாக, முன்னிறுத்துகிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.
‘பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம்’ என ஏன் ஒப்பிடுகிறீர்கள்? உடனடியாக இந்த விளம்பரத்தை மெட்ரோ எடுத்திட வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.