பயணிகள் கவனத்திற்கு! மே 1 முதல் 'சிங்கார சென்னை அட்டை' மட்டுமே..! மெட்ரோ நிர்வாகம் அதிரடி..!

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இனி ‘சிங்கார சென்னை கார்டு’ மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Singara Chennai Card
Singara Chennai Cardimage credit-apacnewsnetwork.com
Updated on

கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கார சென்னை அட்டை(தேசிய பொது போக்குவரத்து அட்டை), தற்போது மெட்ரோ பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் மே 1-ம்தேதி முதல், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாறத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், பயணிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் (மெட்ரோ, மாநகரப் பேருந்துகள், புறநகர் ரெயில் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவை) ஒரே அட்டையைப் பயன்படுத்தித் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே அட்டை' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை ஒரே அட்டையில் இணைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பழைய வகை பயண அட்டைகளை வைத்திருக்கும் பயணிகள் உங்களிடம் இருக்கும் பழைய அட்டைகளில் இருப்புத் தொகை இருக்கும் வரை அவற்றை வழக்கம் போலப் பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, பழைய டிராவல் கார்டுகளை வைத்திருக்கும் பயணிகள், அதில் உள்ள மீதமுள்ள தொகையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, திரும்பப் பெற அல்லது மாற்றிக்கொள்ள மெட்ரோ நிறுவனம் இரண்டு வழிகளைப் பரிந்துரைத்துள்ளது:

அதாவது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் உங்கள் பழைய கார்டில் உள்ள தொகையை QR அடிப்படையிலான 'ஸ்டோர்டு வேல்யூ பாஸ்'Stored Value Pass (SVP) ஆக மாற்றிக்கொள்ளலாம். அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC)மாற்றிக்கொள்ளலாம்.

மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவால், படிப்படியாகப் பழைய வகை அட்டைகள் புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டு, அனைத்துப் பயணிகளும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அட்டைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பயணிகளே உஷார்..! இந்த தவறை செய்தால் அபராதம்- மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Singara Chennai Card

இந்தத் தொழில்நுட்ப மாற்றம் அனைத்து பயணிகளுக்குத் தொடக்கத்தில் சற்று சிறு சிரமமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com