

சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
சென்னையில் தினமும் வேலைக்கு செல்பவர்களுக்கும், கல்லூரிக்கு செல்பவர்களுக்கு மெட்ரோ ரெயில்கள் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. மின்சார ரெயில்களுடன் ஒப்பிடும்போது இதில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்றாலும், விரைவான பயணம் என்பதால் அனைவரின் விருப்ப தேர்வாகவே உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிகளுக்கு பல்வேறு சிறப்புவசதிகள் உள்ளதுடன், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக இருக்கைகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் மெட்ரோ ரெயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மற்ற பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.
மூத்த குடிமக்கள் வரும்போது கூட,அவர்களுக்கு அமர்ந்திருப்பவர்கள் எழுந்து இடம் தருவதில்லை.இதனால் அவர்களுக்கு எனத் தனி பெட்டிகள் ஒதுக்கக் கோரிய பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள ஐம்பது இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.
அதற்கு, இருக்கைகள் இருந்தாலும், அது முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை இருக்கைகளில் மற்ற பயணிகள் அமர்ந்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, மெட்ரோ அதிகாரிகள் அவ்வப்போது ரெயில்களில் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்மின்றி தகுதியற்ற நபர்கள் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, அவர்களுக்கு இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருக்கை மறுக்கப்படுவது குறித்து தகுதியுள்ள பயணிகளிடமிருந்து புகார்கள் வந்தால், அதன் மீது உடனடி மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.