
சென்னையில், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தையே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரெயில்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. இந்த பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மூன்று பொது போக்குவரத்திலும், வெவ்வேறு கட்டண முறைகள் மற்றும் டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. ஒரு நபர் அடுத்தடுத்து இந்த சேவைகளை பயன்படுத்தும்போது, இந்த வேறுபட்ட டிக்கெட் முறையால், பல்வேறு நடைமுறை சிக்கல்களும் நேர விரயமும் ஏற்படுகின்றன.
பயணிகளின் சிரமத்தையும், நேரத்தையும் குறைக்கும் வகையில், இதற்காக, ஒருங்கிணைந்த முறையில், ஒரே டிக்கெட் நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், வரும் 22-ம் தேதி முதல், ஒரே டிக்கெட்டில், மாநகரப் பேருந்து, மின்சார ரெயில் மற்றும் மெட்ரோவில் பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒரே டிக்கெட்டில் மூன்று போக்குவரத்திலும் பயணிக்கும் வகையில் 'கும்டா' என்னும் போக்குவரத்து குழுமம், தனியார் நிறுவனம் மூலம் இதற்காக புதிய மென்பொருளை தயாரித்து, இதன் அடிப்படையில் புதிய செயலியை உருவாக்கி உள்ளது.
இந்த செயலி மூலம், பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பயணிகள் அவர்கள் பயணிக்க எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை செயலியில் குறிப்பிட்டு அதற்கான கட்டணம் செலுத்தினால் கியூ.ஆர். குறியீட்டு டிக்கெட், உங்களுடைய மொபைல் போனில் வரும்.
இந்த குறியீட்டை நீங்கள் பயணிக்கும் பொது போக்குவரத்தில் காட்டி, மாநகர பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் என உங்கள் வசதிக்கு ஏற்ப எதில் வேண்டுமானாலும் ஒரே டிக்கெட்டின் மூலம் பயணிக்கலாம். பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் தற்போது முடிவடைந்த நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் வரவுள்ளது. 'சென்னை ஒன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை வரும் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அறிமுகப்படுத்தி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளின் பணமும், நேரமும் மிச்சமாகும் என்பது உறுதி.