

சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில், இந்த ஆண்டு முதல் மாணவியரும் இணைந்து படிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
184 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள புகழ்பெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இனி மாணவர்களும் மாணவியரும் சேர்ந்து படிக்கலாம்.இந்த ஆண்டு முதல் இருபாலர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாகத் தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் ஆடவர் கல்லூரிகளில் (Men's Colleges) மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில், இருபாலர் கல்லூரிகளில் (Co-educational Colleges) சேர்ந்து படிக்கவே மாணவ, மாணவிகள் இருதரப்பும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் அமைந்துள்ள 184 ஆண்டுகால பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசானது இருபாலர் கல்லூரி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இருபாலர் அந்தஸ்து குறித்த பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, அதன் 184 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசாணை (G.O. No.100 dated 15.06.26) கல்லூரிக்கு இருபாலர் (Co-Educational) அந்தஸ்தை வழங்கியுள்ளது.
“1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் கல்விச் சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் மூலமாக, தரமான உயர் கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத்தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமைகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவை, பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வரவேற்றுள்ளனர். இந்தச் சாதனை, பல்வேறு தரப்பினரின் நீண்டகால முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கல்லூரியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
புதிய அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் பச்சையப்பன் கல்லூரி, அறிவு, நற்பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான தனது பணியில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக சமூகத்திற்கு சிறப்பாகச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியபடி, முன்னேற்றமிக்க எதிர்காலத்தை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.