சென்னைவாசிகளே அலர்ட்! இதுமட்டும் நடந்தால் இனி ஸ்பாட் ஃபைன் ரூ.25,000+ வண்டி பறிமுதல்!

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசினை கட்டுப்படுத்த 'தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025' நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
building waste material
building waste material AI Image
Published on

சென்னை மாநகரை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் 'தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025'(Clean and Safe Construction Guidelines 2025) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன உரிமையாளர்களும், கட்டுமான நிறுவனங்களும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொள்கிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றாமல் தூசி மற்றும் மாசை ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பொருட்களை மூடி வைக்காமல் கொண்டு செல்வதும், கழிவுகளைக் கண்ட இடங்களில் கொட்டுவதும், இடிபாட்டு கழிவுகளை விதிமுறைகளை மீறி ஏற்றி செல்வது போன்ற செயல்களால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்த விதிமீறல்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் தார்ப்பாலின் கொண்டு முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும். தூசிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலைகளில் சிதறும் வகையில் ஏற்றி செல்லாமல் இருப்பதுடன், கூடுதல் சுமைகளை (ஓவர் லோடிங்) ஏற்றி செல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட அளவுடன் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்படி இல்லாமல் வாகனத்தின் மேற்புறம் மற்றும் நான்கு பக்கங்களிலும் தார்ப்பாலின் கொண்டு முழுமையாக மூடாமல், கட்டுமான பொருட்கள் மற்றும் தூசிகள் சாலைகளில் சிதறி காற்று மாசுபாடை ஏற்படுத்தும் வகையில் செல்லும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூபாய் 25,000 அந்த இடத்திலேயே விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் அபராதத் தொகையை முழுமையாக செலுத்திய பின்பே விடுவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மாநகராட்சி இப்படி கடுமையான விதிமுறைகளைப் போடுவதன் மூலம் காற்றில் கலக்கும் கட்டுமான பொருட்களின் நுண் துகள்களைக் குறைத்து காற்று மாசுபாட்டை உண்டாக்காத வகையில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். எனவே பொதுமக்களும் சற்று விழிப்புடன் இருந்து பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டாமல் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கவலையளிக்கும் கட்டுமான பொருட்களின் விலை!
building waste material

இதே போல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் அவர்களது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி ஏற்கனவே போக்குவரத்து துறையினால் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com