நம் அடிப்படைத் தேவைகள் வாழ இடம், பசியாற உணவு, மானம் காக்கும் உடை, வேலை தரும் கல்வி போன்றவை ஆகும். இவற்றுள் நம்மை வெப்பத்திலிருந்தும், மழை, பனியியிருந்தும் காப்பது நாம் வாழும் வீடே ஆகும்.
முற்காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கில் இருந்த நிலையில் ஒரே வீட்டிலேயே பல தலைமுறையினர் வசிப்பது சாத்தியமாக இருந்தது. ஆனால், தற்போதெல்லாம் அனைத்து குடும்பங்களும் அணுக் குடும்பங்களாக (nuclear families) மாறி விட்டன. பெருகி வரும் மக்கள் தொகையில் ஆளுக்கொரு வீடு அவசியம் என்பதாகி விட்டது. தனித்தனி வீடுகள் எல்லாம் அடுக்ககங்களாக மாறிவிட்டன. கிராமப்புறங்களிலும் விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவிட்டன.
நாம் வாழும் நிலப்பரப்பு இயற்கையின் கொடை. எனவே, அதன் அளவை நம்மால் கூட்டவோ, குறைக்கவோ இயலாது. நாம் வாழும் நிலப்பரப்பில்தான் வீடுகளை கட்டிக்கொண்டு வாழவேண்டும். எனவேதான், நாம் வாழ்வதற்கான நிலத்திற்கான தேவை அதிகரித்து அது பற்றாக்குறைக்கு உள்ளாகிறது. அதன் விலையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
மேலும், வீடுகளில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு தனி அறை தேவையென கருதப்படுகிறது. இந்நிலையில் அடுக்ககங்கள் சென்னை போன்ற நகரங்களிலும், புறநகர் பகுதிகளிலும் பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுவதற்காக தேவைப்படும் கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, ஜல்லி, செங்கல், நவீன ஓடுகள், கழிவறை சாதனங்கள், மின்சாதனங்கள் போன்றவற்றின் விலை சமீப காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளன.
2020ல் ஒரு கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 900 வரை இருந்தது. ஆனால், இன்று அது 1200 ரூபாயை தாண்டிவிட்டது. அதே போல, வீடு கட்டுதல் சார்ந்த அனைத்து உழைப்பூதியங்களும் உயர்ந்து விட்டன. ஒரு வீட்டை கட்டுவதில் பெரும்பான்மையான நிதியை மனித உழைப்புக்காகவே நாம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. கட்டுமான பொருட்களை பெரும்பாலும் நகரங்களில்தான் வாங்கமுடியும். எனவே, ஊரகப் பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் இவற்றை கொண்டு செல்வதற்காக கூடுதலாக போக்குவரத்து செலவினையும் ஏற்க வேண்டியிருக்கிறது.
உயர்ந்து வரும் பண வீக்கம் அனைத்து பொருள்களின் மீதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால், வீடு கட்டும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பதையும் சந்தையில் தவிர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சாமானிய மனிதனுக்கு சொந்த வீடு என்பது இன்னும் ஒரு கனவாகத்தான் இருக்கிறது.
ஒரு தனி மனிதன் வாங்கும் சம்பளத்தையும், அரசுக்கு செலுத்தும் வருமான வரியையும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச நிபந்தனைகளுடன் தவணை முறையில் வீடு கட்டவோ, வீடு வாங்கவோ கடனைத் தர பல வங்கிகள் முன்வருகின்றன. ஆனால் அவர்கள் அந்த கடனை கட்டிமுடிப்பதற்கு வட்டியுடன் ஆகும் தொகையைப் கணக்கிட்டு பார்த்தால் வாடகை வீட்டிலேயே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது. இவற்றையும் மீறி சொந்த வீட்டில் வாழ விரும்பும் ஆசை வராமல் இருப்பதில்லை.
கட்டுமான பொருட்களில் அடிக்கடி நிகழும் விலை உயர்வு பொதுமக்களையும், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களையும் வெகுவாக பாதிக்கின்றது. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் அரசின் கொள்கை முடிவுகளாலும், புறக்காரணிகளாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
இவற்றின் விலையை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே, இவற்றின் விலை குறைவது சாத்தியமாகும். இவற்றின் விலை உயர்வால் அதிக வேலைவாய்ப்பைத் தரும் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் இவற்றின் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாய் அமைகின்றது. கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இவற்றிற்கான விலை நிர்ணயக் குழு ஒன்றை அரசு அமைக்கலாம். இக்குழுவினர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து கட்டுமானப் பொருட்களுக்கான நியாயமான விலை ஒன்றை நிர்ணயம் செய்யலாம். அரசு குவாரிகளை அதிக அளவில் திறப்பதன் மூலம் அவற்றிற்கான பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும். குவாரிகளுக்கு உள்ள கட்டுபாட்டை அரசு மேலும் தளர்த்தலாம்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நிபுணர்களின் பரிந்துரைகளை அரசு கோரலாம். நியாயமற்ற விலை ஏற்றம், பொருட்களின் தரம் போன்றவற்றை கண்காணிப்பதற்கு பொறியாளர் சங்க உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை சார்ந்த பொறியாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்றை நியமிக்கலாம். நமது மாநில கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தலாம்.
தமிழக அரசு தனது உரிய நடவடிக்கைகள் மூலம் இதில் தலையிட்டு அனைவருக்கும் வீடு என்னும் கனவுக்கு உரம் சேர்க்கும் பணியில் இறங்குவது நல்லது. இதுவே பொது மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.