செக்யூரிட்டி அலர்ட்: இனி தலைமைச் செயலகத்திற்குள் இந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்image credit-news9live.com
Updated on

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். தலைமைச் செயலக வளாகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 15-ம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை அம்மாள் என்ற 45 வயது பெண்மணி தலைமைச் செயலகத்தின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்தார். மனு அளித்து விட்டு வெளியே வந்த அவர், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலில் போலீசார் மற்றும் முதல்வர் பாதுகாப்பு பிரிவினர் தனித்தனியாக சோதனை நடத்தும் நிலையில், முதல்வர் தனிப்பிரிவு வரை அந்த பெண்மணி மண்ணெண்ணெயை கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில் அந்த பெண்மணி கொண்டு வந்த பாட்டிலில், தண்ணீருடன் மண்ணெண்ணெய் கலந்து இருந்ததால், அது குடிநீர் பாட்டில் போலவே தோன்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு குறைபாட்டைத் தொடர்ந்து, தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வளாகத்திற்குள் நுழையும் பொதுமக்களிடம் சோதனைகள் பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருபெரும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளை பார்த்து சலித்து போன மக்களுக்கு தவெக அரசு மீது பெரும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு என்ன பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆட்சி காலங்களில் இருந்ததை விட வெகுவாக அதிகரித்துள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்image credit-dinamalar.com

இந்த புகார் பெட்டியில் மனுக்களை போட நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கையின் விளைவாக புகார் மனுக்கள் அதிக அளவில் குவிந்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தான் புகார் கொடுக்க வந்த பெண்மணி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை தொடர்ந்து தனிப்பிரிவுக்கு வரும் பொதுமக்களின் உடமைகள் முழுமையாக தீவிரமாக பரிசோதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். பொதுமக்கள் கொண்டுவரும் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்டவை கூட கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கண்ணாடி பாட்டில்கள், மருத்துவர் பரிந்துரை இல்லாத மாத்திரைகள், சென்ட் பாட்டில்கள் போன்றவற்றை தலைமை செயலகத்திற்கு உள்ளே கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிக்கு இலவசப் பயிற்சி!
தலைமைச் செயலகம்

மேலும் தலைமைச் செயலகத்திற்குள் யாரும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லாதவாறு காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், நுழைவாயிலில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பேட்டரி வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் மூலம் உள்ளே அழைத்து செல்லப்படுகின்றனர். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு செல்ல சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முதலமைச்சர் தனிப்பிரிவிற்குப் புகார் அல்லது மனு அளிக்க வரும் நபர்களுடன் பாதுகாப்புக்காகக் காவல்துறையினரும் உடன் அனுப்பப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் இடமாற்றமா?
தலைமைச் செயலகம்

இந்த அதிரடி நடவடிக்கைகளால் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் தற்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com