‘கேப்டன் கூல்’ புனைபெயருக்கு டிரேட் மார்க் கேட்கும் ‘தோனி’! ஆட்சேபம் இருக்குமா என்ன?

கிரிக்கெட் ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் ‘கேப்டன் கூல்’ புனைபெயருக்கு டிரேட் மார்க் கேட்டு தோனி முறைப்படி விண்ணப்பித்து உள்ளார்.
Dhoni
Dhoni
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவர் தோனி. 44 வயதான ஜாம்பவான் ராஞ்சியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் வலது கை மட்டையாளர். டி20, ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி.யின் 3 சர்வதேச தொடர்களிலும் கோப்பை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை முதலிடத்துக்கு அழைத்து சென்றார்.

தோனி ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்றும் ‘கேப்டன் கூல்’ என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியை காண வரும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் தோனியை பார்ப்பதற்காகவே வருவார்கள். அவருக்கு புகழ்பெற்ற அந்தஸ்து இருந்தபோதிலும், தோனி விளையாட்டில் மிகவும் அர்ப்பணிப்புள்ள வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.

களத்தில் தனது அமைதியான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர் தோனி. போட்டிகளின் பரபரப்பான சூழலிலும் எந்தவித பதற்றத்துக்கும் ஆளாகாமல் அமைதியாக இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றுவதே அவரது தனித்திறமை ஆகும்.

அணி தோல்வியின் விளிம்புக்கே சென்றாலும் முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் அமைதியின் உருவமாக போட்டியை வழிநடத்தும் அவரை, ‘கேப்டன் கூல்’ என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களிடமும் ‘கேப்டன் கூல்’ என்றால் அது தோனி என்பது பதிந்து விட்டது.

ஐ.சி.சி.யின் இந்த ஆண்டுக்கான ஹால் ஆப் பேம் பட்டியலில் தோனியின் பெயரை சேர்த்து கவுரவித்தது. அப்போது அவரது அமைதியை சுட்டிக்காட்டி பாராட்டி இருந்தது.

எந்தவித அழுத்தத்தின்போதும் அமைதியாகவும், ஒப்பிடமுடியாத வியூக திறமையுடனும் கொண்டாடப்படும் தோனி, கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், தலைவராகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.

இவ்வாறு ‘கேப்டன் கூல்’ என்ற புனைபெயருக்கு மிகவும் பொருத்தமாக இருந்து வரும் தோனி, தனது புனைபெயருக்கு டிரேட் மார்க் கேட்டு முறைப்படி விண்ணப்பித்து உள்ளார். கடந்த மாதம் 5-ந் தேதி வழங்கப்பட்ட தோனியின் இந்த விண்ணப்பத்தை ஏற்று விளம்பரப்படுத்தி இருப்பதாக டிரேட் மார்க் பதிவகம் தெரிவித்து இருக்கிறது. இது கடந்த 16-ந் தேதி வெளியான பதிப்பில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு பயிற்சி, பயிற்சி வசதிகள், விளையாட்டு சேவை பிரிவின் கீழ் தோனி இந்த விண்ணப்பத்தை செய்து உள்ளார்.

இதையும் படியுங்கள்:
‘தோனி’யை கவுரவித்த ‘ஐசிசி’ ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்தார்...
Dhoni

தோனியின் இந்த விண்ணப்பத்துக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிப்பதற்கு வருகிற அக்டோபர் 15-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதுவரை யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமல் இருந்தால், முறைப்படி பதிவு செய்யப்படும் நிலைக்கு முன்னேறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் அது ஒரு சட்டப்பூர்வ சர்ச்சையாக மாறும். அதற்கு விண்ணப்பதாரர் பதில் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com