
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் மிகவும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததை அடுத்து மக்கள் சாரை சாரையாக சொந்த ஊருக்கு படை எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்னையை விட்டு வெளியேறி உள்ளதால் , மாநகரின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தும் வாகனப் போக்குவரத்துகள் குறைந்தாலும் இன்னொரு விஷயத்தில் சென்னை மாநகரம் மூச்சுத்திணறி வருகிறது.
இந்த நிலையில் மீதமுள்ள பெரும்பாலான சென்னை நகரவாசிகள் மிகவும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் பலருக்கும் நியாபகம் வரும். பட்டாசு வெடிப்பது தான் தீபாவளி பண்டிகையின் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது. ஆயினும் பட்டாசு வெடிப்பதால் மாசுபாடு அதிகமாகும் என்பதால் , பட்டாசுகள் வெடிக்க அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
சென்னையில் காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியது. அது தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் , நேற்று மாலையிலிருந்தே சென்னையின் பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர். கொண்டாட்ட மனநிலையில் இருந்த மக்கள் இந்த விதிகளை பின்பற்றாமல் ,நேற்று மாலையில் இருந்து பட்டாசுகளை தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
பட்டாசுகள் வெடித்த போது வெளிப்பட்ட புகையால் சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு மட்டும் சென்னையின் சராசரி காற்றின் தரக் குறியீடு 109 ஆக இருந்தது. இதில் நுண் துகள்களான PM 2.5 மற்றும் PM 10 ஆகியவற்றின் தாக்கம் நேற்று அதிகமாக காணப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகளான அரும்பாக்கம், ஆலந்தூர் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு(AQI) மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
தீபாவளி தினமான இன்று, மக்கள் விடியற்காலை முதலே பட்டாசுகளை கொளுத்தத் தொடங்கியதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரம் பாதிக்கப்பட்டது.இன்று காலையில் பதிவான காற்றுதர குறியீட்டின் படி ஆலந்தூரில் 95 , அரும்பாக்கம் 106 , கொடுங்கையூர் 68 , மணலி 75 , பெருங்குடி 70 ,வேளச்சேரி 71 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல், செங்கல்பட்டில் 115, காஞ்சிபுரத்தில் 82, கும்மிடிப்பூண்டியில் 96, மற்றும் கோவையில் 108 ஆகக் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 400 ஐ தாண்டி சென்று விட்டது. இன்று காலை நிலவரப்படி, வாசுபூர் பகுதியில் 402 ஆகவும், அசோக் விகாரில் 386, ஆர்.கே.புரத்தில் 372 ஆகவும் காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. தலைநகருடன் ஒப்பிட்டு பார்க்கையில் சென்னை மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மிகவும் குறைவானது தான் . இதிலிருந்து விரைவில் மீண்டு விட முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.