1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்!

 1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்!

ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தின் பட்டாவினை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார்.

நெல்லூர் மாவட்டத்தின் கவேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இதனை பயனாளிகளுக்கு வழங்கினார். 2.06 லட்சம் ஏக்கர் நிலத்துக்கான பட்டாக்களை அவர் விவசாயிகளிடம் ஒப்படைத்தார்.

இதற்காக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான தற்போதைய அரசு, இந்த நிலத்தின் பட்டாக்களை அந்தந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து அந்த விவசாயிகளை கண்டறிவதற்காக மாவட்ட கலெக்டர்கள், வருவாய் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு நேற்று ஒரே முறையாக பட்டாக்கள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நிகழ்ச்சியில் பேசும்போது அவர், 'இந்த நிலங்களின் சந்தை மதிப்பு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடியாவது இருக்கும். பத்திரப்பதிவு கட்டணம் மட்டுமே சுமார் ரூ.8 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த 2,06,170 ஏக்கர் நிலத்தின் உரிமை பெற்றிருப்பதன் மூலம் 97,471 குடும்பங்கள் பயனடையும்' என்று கூறினார்.

முன்னதாக இந்த நிலங்கள் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருந்ததாவது:- தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமானது என உரிமையை தெளிவாக நிறுவ முடியாதபோது, இந்த நிலங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வருவாய் பதிவேடுகள் அல்லது ரீசர்வே பதிவேட்டில் வகைப்படுத்தப்பட்டு அப்படியே விடப்பட்டன.

இந்த சந்தேகத்தின் காரணமாக இந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகள், அவற்றை விற்பனை செய்யவோ, அடமானம் உள்ளிட்ட பிற நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாமலோ அவதிப்பட்டனர். நெல்லூர் மாவட்டத்தில் மட்டுமே இவ்வாறு 43 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. அண்டை மாநிலமான பிரகாசத்தில் 37 ஆயிரம் ஏக்கர், கடப்பாவில் 22 ஆயிரம ஏக்கர் என அனைத்து மாவட்டங்களிலுமாக 2 லட்சம் ஏக்கருக்கு மேலான மேற்படி நிலங்கள் இருந்தன. தற்போது இந்த பிரச்சினைக்கு ஒரே நடவடிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com