தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தற்போது தூத்துக்குடி சென்றிருக்கிறார். இன்று காலை நடைப்பயிற்சி சென்ற முதல்வர், நடைப்பயிற்சியோடு அப்பகுதி மக்களிடம் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழிக்காக வாக்கு சேகரிக்கும் பணியையும் மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லோரும் சிறப்பாகத் தேர்வு எழுதி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியபடியே சென்ற முதல்வர் மாணவ, மாணவிகளிடம், ‘நன்றாகப் படித்து எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் சிறந்து விளங்க வேண்டும்’ என வாழ்த்தினார். அப்போது, அவர்கள், ‘முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் இரண்டும் எங்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது. அதற்காக நன்றி’ என்று கூறினர்.
அதையடுத்து, முதலமைச்சரை சந்தித்த மகளிர் குழுவினர் தாங்கள் செயல்படுத்தும் மகளிர் உரிமைத் திட்டம் எங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறது. நீங்கள் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்தினர். தொடர்ந்து மீனவ கிராமங்களுக்குச் சென்ற முதல்வரை அன்போடு அழைத்த ஒரு மீனவர் இல்லத்திற்குச் சென்று அவர்கள் வழங்கிய தேநீரைப் பருகியபடியே மீனவர்களின் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் நினைவுபடுத்தினார்.
அடுத்து, தூத்துக்குடி காய்கறிச் சந்தைக்குச் சென்ற முதல்வரைக் கண்டதும் அங்கிருந்த காய்கறி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காய்கறி கடைகளை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துச் சென்ற முதலமைச்சரை வியாபாரிகள் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வரவேற்றார்கள்.
முதலமைச்சரின் இந்த நடைப்பயணத்தின்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.