2024ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறந்த திருநங்கை விருது வழங்கும் முதல்வர்
சிறந்த திருநங்கை விருது வழங்கும் முதல்வர்
Published on

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (29.7.2024) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார்.

மூன்றாம் பாலினத்தவர் என்ற பெயருக்கு மாற்றாக அவர்களின் சுயமரியாதையை காக்கும் வகையில் ‘திருநங்கை’ என்ற பெயரினை கலைஞர் அறிமுகப்படுத்தினார். திருநங்கைகளுக்கு  சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட 2008ம் ஆண்டு கலைஞர் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தை தோற்றுவித்தார். அந்நலவாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை, தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயதொழில் புரிந்திட மானியம், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத் தொகை, திருநங்கைகள் உயர் கல்வி பயின்றிட கல்வி கனவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இதுவரை 9080 திருநங்கைகளுக்கு அந்நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, 617 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய மானியமும், 1599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு  மாதாந்திர ஓய்வூதியமும், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் திருநங்கைகள் 29.74 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு, சிறந்த திருநங்கை விருது கடந்த 2021ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி பூ கட்டும் தொழில் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து  தனது தனித் திறமையால் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார். வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். தோவாளையைச் சார்ந்த 9ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, 8 வயது மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து, நாட்டை விட்டு வெளியேறிய ஹிஸ்புல்லா அமைப்பு!
சிறந்த திருநங்கை விருது வழங்கும் முதல்வர்

இப்படி, திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை சந்தியா தேவி 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம், திருநங்கை சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருதான 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் வே.அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைச் செயலாளர் ச.வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com