கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

நோயாளியிடம் உடல் நலம் விசாரித்த முதல்வர்
நோயாளியிடம் உடல் நலம் விசாரித்த முதல்வர்
Published on

சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வருடம் ஜூன் மாதம் திறந்து வைத்தார். 1000 படுக்கை வசதிகள்கொண்ட இம்மருத்துவமனை, இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சைத் துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.

இம்மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு, அந்த நோயாளிகளின் உறவினர்களுடன் உரையாடினார். மேலும், நரம்பியல் சிகிச்சை பிரிவிற்கும் சென்று அங்கு உள்ள நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளையும் பார்வையிட்டார்.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை பரிசோதித்த முதல்வர்
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை பரிசோதித்த முதல்வர்

இதனையடுத்து, இங்கு செயல்பட்டு வரும் இதய கேத்லாப் ஆய்வகத்திற்குச் சென்று ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுக் கூடத்திற்குச் சென்ற முதலமைச்சர், உணவின் தரத்தினை சுவைத்துப் பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனைக்கு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்குமாறும், டயாலிசிஸ் சிகிச்சை பிரிவிற்கு கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்குமாறும் ஆணையிட்டார்.

இதையும் படியுங்கள்:
பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்த மத்திய பட்ஜெட்!
நோயாளியிடம் உடல் நலம் விசாரித்த முதல்வர்

இந்த ஆய்வின்போது முதலமைச்சர், மருத்துவர்களிடம் மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவமனை முதல்வர் டாக்டர் பார்த்தசாரதி, சிறப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ், மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com