- நட்சத்திரா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது பட்ஜெட் 2024. கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. அதேசமயம், வளர்ச்சி மக்களைப் போய் நேரடியாகச் சேர வேண்டும் என்ற எண்ணமும் எல்லோரிடமும் இருந்தது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு, பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால், பட்ஜெட் 2024 வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தியது. உதாரணமாக, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கத் தோள்கொடுத்த ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதீஷ்குமார் ஆகியோர் முன்வைத்த சிறப்பு அந்தஸ்துக்குச் சற்றும் குறைவில்லாமல் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ‘ஆந்திரத்துக்கும், பீகாருக்குமான பட்ஜெட் போதும், நமது நாட்டுக்கான பட்ஜெட்டை சீக்கிரம் அறிவியுங்கள், ப்ளீஸ்’ என்று நெடிசன்கள், சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யவே ஆரம்பித்துவிட்டனர்.
இந்த பட்ஜெட்டில் முக்கியமான விஷயங்கள் என்று பார்த்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமான பயிற்சிகளுக்குச் செய்யப்பட்டுள்ள முதலீடு முக்கியமானது. அதாவது, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களோடு இணைந்து, அவர்களது நிறுவனங்களிலேயே ‘அப்ரண்டீஸ்களாக’ சேர்த்து, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பயிற்சி பெறுவார்கள். அதோடு அவர்களுக்கு உபகாரச் சம்பளமும் வழங்கப்படும்.
இத்திட்டம் மறைமுகமாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு மறுதிறன் பயிற்சி கொடுத்தால்தான் அவர்களை கரையேற்ற முடியும் என்பதைத்தான் இந்தத் திட்டம் சொல்கிறது.
இந்த பட்ஜெட் இன்னொரு வகையில் முக்கியமானது. தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒரு தோற்றம் ஏற்பட்டது. வெகுஜனங்கள் விரும்பும் மாதிரி ஏராளமான சலுகைகளும் மானியங்களும் இலவசங்களும் கொண்டதாக முழு பட்ஜெட் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் திசையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எந்தக் கவர்ச்சிகரமான திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் இல்லை என்பதே, நரேந்திர மோடியின் மன உறுதியைக் காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை என்பதற்காக, அவர் பாப்புலரான பட்ஜெட்டையே சமர்ப்பிக்க ஒப்புக்கொள்ள சம்மதிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
நாட்டின் நிதி நிர்வாகக் கட்டுப்பாடு, ஒழுங்கு என்பதே மிகவும் முக்கியம் என்பதை இந்தப் பட்ஜெட்டைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். இத்தனைக்கும் இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரம், ஹரியானா, ஜார்க்கண்டில் சட்டசபைத் தேர்தல் வரப் போகின்றன. இவற்றில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு ஏற்ப, இப்போதே அந்த மாநிலங்களின் மீது கடைக்கண் பார்வை செலுத்தியிருக்கலாம். ஆனால், அது தன்னுடைய நோக்கம் அல்ல, தான் வழங்குவது நாடு முழுமைக்குமான பட்ஜெட் என்பதில் நிர்மலா சீதாராமன் தெளிவாக இருந்துள்ளார்.
இந்த ஆண்டும், மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த 2018 முதல் ஒவ்வோர் ஆண்டும், பெரிய தொகை ஒதுக்கப்பட்டு, சாலைகள், பாலங்கள், ரயில்வே திட்டங்கள் என்று உள்கட்டுமானப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, நாடு பொருளாதார ரீதியாக மீண்டதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இத்தகைய மூலதன செலவுகள்தாம்.
இந்தப் பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்குக் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யத் தயங்குவதால், இந்த ஆண்டும் பெரும் தொகை வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவு செய்யப்பட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரி விதிப்பிலும் சில முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, நீண்ட கால மூலதன ஆதாய வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், இத்தகைய ஒரு திட்டத்திலும் மக்கள் பயன் பெறக்கூடும் என்று ஒருசில நெட்டிசன்கள் தமது கணக்குகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த பட்ஜெட் புதிய வரி விதிப்பு முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பழைய வரிவிதிப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வரி விதிப்பு முறையை மக்களிடைய பிரபலப்படுத்தும் முயற்சிதான் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஸ்டாண்டர்டு டிடெடிஷன் அளவு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், புதிய வரித் திட்டத்தில் வரி அடுக்குகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு 17,500 ரூபாய் அளவுக்கு வரிச் சலுகை கிடைக்கும் என்று தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.
நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் வானையே வில்லாக வளைத்துக் கொடுப்பார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். அவர் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கும் கதையாக தன்னால் முடிந்தவற்றைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.