

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு கலைக்கல்லூரி, ரூ.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரி, குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை இடம்பெறுகின்றன. இதுதவிர மாவட்டத்துக்கு புதிய திட்டங்களையும் முதல்வர் அறிவிக்க இருக்கிறார்.
திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதல்வா் தொடங்கிவைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ. 16 கோடியில் நிறைவேற்றப்படும்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய பாதள சாக்கடைகள், சுத்திகரிப்பு நிலையம் ரூ. 8 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் புனித திருத்தலங்களான இடும்பன்குளம், சண்முகாநதி ரூ.6 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்
ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி பகுதியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படும்
கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.
ஒட்டன்சத்திரத்தில் அதிக குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் ரூ. 17 கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும்.
ஏற்றுமதியாகும் கண்வழிக்கிழங்கு பயிருக்கு நிலையான நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.