

நாட்டில் தனிநபர் அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு வரை ஆதார் கார்டு இன்றியமையாத ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஆதார் கார்டை இ-ஆதார் மற்றும் அட்டை வடிவிலான காகித ஆதார் என 2 வழிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அட்டை வடிவிலான ஆதார் கார்டு சேதம் அடையவும், கிழிந்து விடவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் தான் பிளாஸ்டிக் வடிவிலான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI).
இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டை வாங்குவதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டடம் தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.
பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையைப் போன்றே பிவிசி எனும் பிளாஸ்டிக் வடிவத்தில் ஆதார் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பிவிசி எனும் பிளாஸ்டிக் ஆதார் கார்டை பெற இந்திய தனித்துவ அடையாள ஆவணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான கட்டணம் ரூ.50-லிருந்து தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் பிளாஸ்டிக் ஆதார் கார்டு கட்டணம் உயர்ந்துள்ளது. வரி மற்றும் டெலிவரி கட்டணம் உள்ளிட்டவையும் இந்த 75 ரூபாய் கட்டணத்தில் அடங்கி விடும். அட்டை வடிவிலான ஆதார் மற்றும் இ-ஆதார் ஆகியவற்றை போன்று, பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அனைத்து இடங்களிலும் செல்லத்தக்க ஆவணமாக கருதப்படுகிறது.
அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளத்தில் பிளாஸ்டிக் ஆதார் கார்டைப் பெற விண்ணப்பித்தால், அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்கள் வீட்டிற்க்கே வந்து சேரும்.
பிளாஸ்டிக் ஆதார் கார்டு நீண்ட நாட்களுக்கு சேதமடையாமல் இருக்கும் என்பதால், பொதுமக்கள் சிலர் ஆர்டர் செய்து வருகின்றனர். இருப்பினும் இன்றளவும் பிளாஸ்டிக் ஆதார் கார்டு குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் பெரிதாக இல்லை என்பதே நிதர்சனம்
விண்ணப்பிக்கும் முறை:
1. முதலில் https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் My Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதன்பிறகு Order Aadhar PVC Card என்பதை கிளிக் செய்து, 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
4. அடுத்ததாக திரையில் தெரியும் கேப்ச்சா குறியீட்டை உள்ளிட்டால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
5. OTP சரிபார்ப்பை முடித்த பிறகு, கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும்.
6. கட்டணம் செலுத்திய பிறகு, ஒரு ரசீது மற்றும் சேவை கோரிக்கை எண் (SRN) உங்களுக்கு வழங்கப்படும். சேவை கோரிக்கை என்னைப் பயன்படுத்தி உங்கள் பிவிசி ஆதார் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
7. அடுத்த ஐந்து வேலை நாட்களில் அஞ்சல் அலுவலகம் மூலமாகவே உங்கள் வீட்டிற்கே பிவிசி பிளாஸ்டிக் ஆதார் கார்டு டெலிவரி செய்யப்படும்.