
சீனாவின் யுனான் மாநிலத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வசித்து வரும் வௌவால்களிடமிருந்து 20 புதிய வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யுனான் எண்டெமிக் நோய் கட்டுப்பாடு நிறுவனம் மற்றும் டாலி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து 10 இனங்களைச் சேர்ந்த 142 வௌவால்களை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் வௌவால்களின் சிறுநீரகங்களில் இருந்து 20 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ்களில் உயிருக்கு ஆபத்தான நிபா வைரஸ் மற்றும் ஹென்ட்ரா வைரஸை ஒத்த புதிய வைரஸ்கள் உள்ளன.
இந்த வைரஸ்கள் மிகவும் ஆபத்தான வைரஸ்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரஸ்களுடன் ஒரு புதிய புரோட்டோசோவா ஒட்டுண்ணி மற்றும் ஒரு புதிய பாக்டீரியாவும் கண்டறியப் பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மற்றும் மற்ற தொற்றுக்கள் அனைத்தும் வௌவாலின் சிறுநீரகத்தில் இருப்பதால் எளிதில் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸ்கள் வௌவால்களின் சிறுநீரில் இருந்தோ அல்லது எச்சத்தின் மூலமாகவோ விரைவாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தண்ணீரிலோ அல்லது உண்ணும் பழங்களிலோ வவ்வால்கள், வைரஸ்களை தனது எச்சத்தின் மூலம் மற்றவர்களுக்கு பரப்பக்கூடும்.
சீன ஆய்வாளர்களின் கருத்துப்படி , தற்போது புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ்களிடமிருந்து மனிதர்களை தாக்கும் தொற்று குறித்து எந்த ஒரு முடிவும் கண்டறியப் படவில்லை. வைரஸ்களின் மரபணுக்களின் அமைப்பு நிபா அல்லது ஹென்ட்ரா வைரஸை ஒத்து இருப்பதால் உடல்நலம் குறித்து கவலைகளை எழுப்புகிறது. நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்கள் மனிதர்களிடம் பரவி தொற்று நோயை உண்டாக்கி பலரையும் பலி வாங்கியுள்ளது.
சீனாவில் பழத்தோட்டங்களில் வௌவால்கள் காணப்படுவது ஒரு சாதாரண விஷயம் தான். வௌவால்கள் பழங்களின் மீது சிறுநீர் கழிப்பதாலும் அல்லது எச்சம் இடுவதாலும் , தோட்டங்களில் உள்ள நீர்நிலைகளின் மீது எச்சங்களை பரப்புவது மூலமாகவும் வைரஸ்கள் தொடர்ச்சியாக பரவக்கூடும். தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமாகவும் வைரஸ்கள் மற்றவர்களுக்கு கடத்தப்படலாம். இந்த பழங்களை சரிவர சுத்தம் செய்யாமலும், பல இடங்களுக்கு விநியோகிப்பதன் மூலமாக நோய்களை சேர்த்து பரப்பும் வாய்ப்பும் உள்ளது.
சீனாவில் வௌவால்களிடம் உள்ள வைரஸ்களை கண்டுபிடித்து உள்ளனர்.அதே போல நம் நாட்டிலும் பழத்தோட்டங்களில் , பெரிய அளவில் இல்லாவிட்டாலும் மிகச் சிறிய அளவில் வவ்வால் கூட்டம் அரிதாக இருக்கின்றன.அதனால் நாம் ஒரு சில விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது வருமுன் காப்பதாக இருக்கும்.
சந்தைகளில் பழங்களை வாங்கும் போது பெரும்பாலும் இந்தியாவின் பாரம்பரியமிக்க பழங்களையே வாங்கவும்.அந்நிய நாட்டு பழங்களை வாங்கும் போது அதை சோதனை செய்து வாங்கவும். எந்தப் பழமாக இருந்தாலும் அப்படியே சாப்பிட்டு விடாமல் லேசான சுடு தண்ணீரில் உப்பை போட்டு நன்கு கழுவி விட்டு சாப்பிடவும்.
தண்ணீர் தொட்டிகளில் அருகில் வவ்வால்கள் எதுவும் குடி இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்கவும். குடிநீரை எப்போதும் காய்ச்சி குடிக்கவும். வீட்டு விலங்குகளுக்கும் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து வழங்கலாம். இவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் புதிய வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.