
பொதுவாக, மண்புழுக்களை விவசாயிகளின் நண்பர்கள் என்று சொல்லுவது வழக்கம். வௌவால்களும் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்கின்றன. அது பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
வௌவால்கள் விவசாயிகளுக்கு செய்யும் நன்மைகள்:
இயற்கையான பூச்சிக் கட்டுப்பாடு: வௌவால்கள் தினமும் இரவில் கொசுக்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள விவசாயப் பூச்சிகள் உட்பட ஏராளமான பூச்சிகளைத் தின்கின்றன. மனிதர்களுக்கு எரிச்சலூட்டும் பூச்சிகளை அகற்றுவதால் நோய் பரவுவது குறைகிறது. உதாரணமாக, ஒரு சிறிய பழுப்பு நிற வௌவால் ஒரு மணி நேரத்தில் 1200 கொசு போன்ற பூச்சிகளை உண்ணும். 150 பெரிய பழுப்பு நிற வௌவால்களின் கூட்டமானது ஒவ்வொரு கோடையிலும் மில்லியன் கணக்கில் வேர்ப்புழுக்களை உண்டு பயிர்களைப் பாதுகாக்கின்றன. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில், விவசாயிகள் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைகிறது.
மகரந்த சேர்க்கை: பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்களைப் போலவே வௌவால்களும் மகரந்த சேர்க்கையாளர்கள். அவை நமது உணவு விநியோகத்தில் ஒரு முக்கிய இணைப்பை வழங்குகின்றன.1200க்கும் மேற்பட்ட வௌவால் இனங்கள் இருக்கின்றன. அவற்றில் 70 சதவிகிதம் பூச்சி உண்ணிகள். பல வௌவால் இனங்கள் பூக்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன. இதில் வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் ராட்சதக் கற்றாழை போன்ற முக்கியமான தாவரங்களின் மகரந்த சேர்க்கைகளும் அடங்கும். 500க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மகரந்த சேர்க்கைக்கு வௌவால்களையே நம்பி உள்ளன. இது பழங்களின் உற்பத்திக்கும் தாவரங்களின் உயிர் வாழ்விற்கும் மிகவும் அவசியமாகும்.
விதை பரவல்: வௌவால்கள் ஏராளமான பழங்களை உண்ணும். அவை தங்கள் கழிவுகள் மூலம் விதைகளை பரவச் செய்கின்றன. காடுகளில் விதைகள் பரவுவதால் நிறையத் தாவரங்களும் செடிகளும் வளர்ந்து மறுகாடு வளர்ப்பு உண்டாகிறது. வாழ்விட மறுசீரமைப்பில் வௌவால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடழிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காடுகளை மீண்டும் உருவாக்க வௌவால்கள் பெருமளவில் உதவுகின்றன. மேலும், தாவர பன்முகத் தன்மையையும் அதிகரிக்கின்றன.
மண் வளம்: வௌவால்களின் எச்சங்களுக்கு ‘குவானோ’ என்று பெயர். இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. மேலும், இவை இயற்கை உரமாக செயல்படுவதால் தாவரங்களின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. ஆரோக்கியமான மண்ணையும் பராமரிக்கின்றன. குகைகளில் வௌவால்கள் வெளியேற்றும் குவானோ எச்சங்களால் பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்களின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளும் நிலை நிறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சுற்றுச்சூழல் அமைப்பில் வௌவால்கள் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக செயல்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு உணர்திறன் கொண்டவை. அதனால் அவற்றின் ஆரோக்கியத்திலும் முக்கிய குறிகாட்டிகளாக விளங்குகின்றன. வௌவால்கள் அதிகம் இருந்தால் அந்த இடத்தில் ஆரோக்கியமான, சீரான சுற்றுச்சூழல் நிலவும்.
மருத்துவ ஆராய்ச்சி: வௌவால்கள் வெளியேற்றும் உமிழ்நீரில் காணப்படும் சேர்மங்கள் இதயம் மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பல்லுயிர் ஆதரவு: வௌவால்கள் பிற விலங்குகளுக்கு உணவு தரும் மூலமாக செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் பரந்த அளவிலான தாவரம் மற்றும் விலங்கு வாழ்க்கையை ஆதரிக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இவை பங்களிக்கின்றன.
வெளவால்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்: வெளவால்களால் பறவைகளைப் போல பறக்க முடியும் என்றாலும், அவை உண்மையில் பறவைகள் அல்ல, பாலூட்டிகள். பறவைகளுக்கு இறகுகள் இருக்கும், முட்டையிடும். பற்களுக்குப் பதிலாக அலகுகளைக் கொண்டுள்ளன.
வௌவால்கள் பறவை இனங்கள் இல்லை என்றாலும் அவற்றின் இறக்கைகள் பறப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. வௌவால்கள் மட்டுமே உண்மையான பறக்கும் திறன் கொண்ட பாலூட்டிகள் ஆகும். இவற்றின் இறக்கைகளில் எலும்புகள் இருந்தாலும் மற்ற பாலூட்டிகளின் எலும்புகளை விட இலகுவானவை மற்றும் நெகிழ்வானதாகவும் இருக்கும்.
பறவைகளுக்கும் வௌவால்களுக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பறவைகள் பகலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், வௌவால்கள் இரவில் அந்தச் செயலைச் செய்கின்றன. இரண்டு உயிரினங்களுமே விதை பரவல், மகரந்த சேர்க்கை, காடுகள் உருவாக்கம் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.