உலக கனிமங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கும் சீனா!
உலகளவில், சீனா அதிக அளவு கனிமங்களை கையிருப்பில் வைத்துள்ளது. சீன நிறுவனங்கள் கனிமங்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவற்றை தனது உள்நாட்டு தொழில்களுக்கும் பயன்படுத்துகின்றன. உலக நாடுகளில் உள்ள சுரங்கங்களை கைப்பற்றுவதன் மூலம், சீனா உலக கனிமங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இதனால் மற்ற நாடுகள் கனிம தேவைக்காக சீனாவை நம்பி இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சீன நிறுவனங்கள் இப்போது உலகளவில் மிகப்பெரிய கனிம உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளன. செர்பியாவிலிருந்து சுரினாம் வரையிலான கனிம சுரங்கங்களை வைத்திருக்கும் ஜிஜின் மைனிங் இப்போது உலகின் முக்கிய கனிம வள உற்பத்தியாளராக மாறியுள்ளது.
மற்றொரு சீன நிறுவனமான CMOC, உலகின் மிகப்பெரிய கோபால்ட் உற்பத்தியாளராக மாறியுள்ளது. சீனா 12 % கூடுதல் தாமிரத்தையும், கடந்த 2023 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 21% கோபால்ட்டையும், 20% அதிகமாக பாக்சைட்டையும் இறக்குமதி செய்தது.
பசுமை ஆற்றலை மக்களின் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்வதில் சில கனிமங்களின் தேவை முக்கியமானது. இன்றைய உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக பசுமை ஆற்றல் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்கால தேவைக்கான கனிம வளங்களை கைப்பற்றும் முயற்சியில் சீனா தீவிரமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சீன நிறுவனங்கள் உலக நாடுகளில் உள்ள கனிம சுரங்கங்களில் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுகள் பெரும்பாலும் வறுமை மிகுந்த ஆப்கானிஸ்தான், கானா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் உள்ளன. சீனா தாமிரம் மற்றும் தங்க சுரங்கங்களை அந்த நாட்டில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
தாமிரம் மற்றும் லித்தியத்தில் முதலீடு:
பசுமை ஆற்றல் சாதனங்களான சோலார் மின்சார அமைப்பு , மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் பேட்டரிகள் மிக முக்கியமானவை. அதை தயாரிக்க தாமிரம், லித்தியம், கோபால்ட் கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த கனிமங்களில் சீனா சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறது. சீன சுரங்க நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டில் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் தாமிரத்தில் மட்டும் 60% முதலீடு செய்துள்ளது. மற்ற முதலீடுகளை லித்தியம், கோபால்ட் மீது திருப்பியுள்ளது.
உலகின் பேட்டரி தயாரிப்பில் மற்ற நாடுகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சீனா பங்களிக்கிறது. லித்தியத்தில் 60%, நிக்கலில் 65 %, கோபால்ட்டில் 70% மற்றும் நியோடைமியம் 90% சீனா வழங்குகிறது. எதிர்காலத்தில் கனிமங்களில் சீனா நிர்ணயிப்பதுதான் விலை என்ற நிலை வருவது நிச்சயம்.