சமீப காலமாக அமெரிக்கா தனக்கு போட்டியாக விளங்கும் சீனாவை கிழே தள்ளி விடுவதற்காக அதிக வரியை விதிக்கத் தொடங்கியது. முதலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடுகளான இந்தியா உள்பட பல நாடுகளின் மீது அமெரிக்காவில் இறக்குமதி செய்ய கடுமையாக வரி விதித்தார். அதில் மற்ற நாடுகளுக்கு 3 மாதங்கள் விலக்கு அறிவித்து விட்டு, சீனாவுடனான வரி விதிப்பை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சீனாவும் அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு கடுமையான வரிவிதித்தது. என்ன தான் சீனா அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தாலும், அது அதற்கு லாபமாக இருக்காது. காரணம் சீனா தான் உலகையே தன் பொருளாதாரத் தேவைக்காக சார்ந்து உள்ளது. உலகில் அதிக பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு சீனப் பொருட்களை தேக்கத்தில் வைக்கும். இந்த தேக்கத்தை எதிர்காலத்தில் முறியடிக்க சீனா ஒரு புதிய திட்டத்தை கண்டு பிடித்துள்ளது.
சீனாவின் புதிய திட்டம் என்னவென்றால் உள்நாட்டிலே அதிக நுகர்வோர்களை உற்பத்தி செய்வது என்பதுதான். சீனா உலகில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வதைப் போல தற்போது அதிக மக்கள் தொகையையும் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வைத் அதிகரிக்க முடியும்.
சீன அரசு அமெரிக்க சந்தையின் இழப்பை ஈடுசெய்ய உள்நாட்டு நுகர்வைத் தூண்ட வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில் சீனா போன்ற வயதான மக்களைக் கொண்ட நாட்டின் சமூகங்களில் நுகர்வு , குழந்தைகளை வளர்ப்பதன் மூலம் இயக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளும் நன்மைகளும் சமூகம் முழுவதற்கும் பொருந்தும்.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் வர்த்தகப் போர், உலகப் பொருளாதாரம் , உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு சீனாவை சார்ந்துள்ள நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது.1987 ஆம் ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஆலன் கிரீன்ஸ்பான் பொறுப்பேற்றதிலிருந்து அமெரிக்கா இறக்குமதி நுகர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா தனது இறக்குமதி நுகர்வின் அதிகப்படியான தன்மையை இவ்வளவு காலம் தொடர, அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை உலகம் முழுக்க தொடரவே அதிக இறக்குமதியை செய்து வருகிறது.
சீனாவில் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது. மக்கள் தங்கள் சொத்துக்களை சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதே நேரம் குழந்தைகளை வளர்ப்பது முதுமையின் போது நிதி தேவைக்காக ஆதாரமாக கருதப்படுகிறது. அதிகமான மக்கள் குறைவான குழந்தைகளைப் பெற விரும்புகின்றனர்.
குறைவான குழந்தைகள் இருந்தால் செலவுகள் குறையும் ,அதனால் நாட்டின் மொத்த சேமிப்பு உயரும் , மொத்த சேமிப்பு உயர்ந்தால் அவர்களின் நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும். பொருள் தேவை குறைவாக இருப்பதால் உபரி பொருளை ஏற்றுமதி செய்து சம்பாதிக்க முடியும்.
இப்போது ஏற்றுமதி செய்ய முடியா விட்டால் அந்த உபரி பொருள் தேக்கம் அடையும். இதனால் உற்பத்தி குறையும். இப்போது குறைந்த உற்பத்தியை சரி செய்ய உள்நாட்டு மக்களை பொருட்களை வாங்க வைக்க வேண்டும். இதற்கு குழந்தைகளை அதிகம் பெற வேண்டும்.
சீனாவில் முதியோர்கள் அதிகம் இருப்பதால் எதிர்கால பணிகளுக்கு தேவையாக மக்களை அவர்கள் உருவாக்க வேண்டும். குழந்தைகள் இல்லாமல் சீனர்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்கள் நாளை பயன்படாமல் போய் விடும். எதிர்கால பாதுகாப்பிற்கு இராணுவ வீரர்களும் நாட்டிற்கு கிடைக்காமல் போய் விடுவார்கள். இந்த காரணங்களுக்காகவும் சீனா மக்கள்தொகை அதிகரிப்பை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.