குட் நியூஸ்..! வந்தாச்சு நிரந்திர தீர்வு..! இனி சக்கரை நோயாளிகளுக்கு மாத்திரை, ஊசி தேவையில்லை..!

diabetes
diabetes
Updated on

உலகின் பொதுவான உடல்நலப் பாதிப்பாக இருப்பது டயாபடீஸ் (Diabetes) எனப்படும் சர்க்கரை நோய். வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரற்ற உணவுமுறை மற்றும் மரபணு ரீதியான காரணங்களால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் டைப் 1, டைப் 2 என இரு வகைகள் உள்ளன.

வகைகளும் பாதிப்புகளும் :

டைப் 1 டயாபடீஸ் (Type 1): உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune System), கணையத்தில் (Pancreas) உள்ள இன்சுலின் உற்பத்தி செல்களை அழித்துவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் இன்றி உயிர்வாழ முடியாது என்ற நிலையில் இருப்பார்கள்.

டைப் 2 டயாபடீஸ் (Type 2): முறையற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் உடல் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை. ஆரம்பக் கட்டத்தில் மாத்திரைகள் மற்றும் முறையான உணவுக்கட்டுப்பாடு (Diet) மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த வகைகளில் டைப் 1 மிக மிக அரிது. ஆனால் டைப் 2 உலகளவில் 90–95% பேருக்கு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் சர்க்கரை மாத்திரைகள் எடுத்துக் ஆகவேண்டும் எனும் கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பான செய்தியாக உள்ளது டைப் 2 நோயை வேரோடு குணமாக்கி சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வைக் கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகளின் சாதனை.

ஸ்டெம் செல் (Stem Cell) தொழில்நுட்பம்: இது எப்படிச் சாத்தியம்?

ஸ்டெம் செல் (Stem Cell) தொழில்நுட்பம் மூலம் செயற்கையான கணைய செல்களை உருவாக்கி, நோயாளிக்கு பொருத்தி சர்க்கரை நோயை குணப்படுத்தி உள்ளனர். சுமார் 25 ஆண்டுகளாக 'டைப் 2' (Type 2) சர்க்கரை நோய் காரணமாக இன்சுலின் ஊசிகளைச் சார்ந்திருந்த 59 வயது முதியவர் ஒருவருக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது நோயாளியின் உடலில் இருந்தே எடுக்கப்பட்ட செல்களைக் கொண்டு, ஆய்வகத்தில் செயற்கையாக இன்சுலின் சுரக்கும் கணைய செல்கள் (Pancreatic Islets) உருவாக்கப்பட்டன. இந்தச் செயற்கை செல்கள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிக்குப் பொருத்தப்பட்டு சிகிச்சை முடிந்து வந்த 11 வாரங்களிலேயே, அந்த நோயாளிக்கு இன்சுலின் ஊசியின் தேவை இல்லாமல் போனது.

தற்போது அவர் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு, சர்க்கரை நோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனை உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்பம் சர்க்கரை நோய் சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இச்சிகிச்சை முறை பரவலாக நடைமுறைக்கு வரும்போது, தினசரி மருந்துகளும் ஊசிகளும் இன்றி கோடிக்கணக்கான மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com